விசிக தொண்டா்கள் சாலை மறியல்: எஸ்.ஐ.-யை தாக்கிய இளைஞா் கைது
தஞ்சாவூரில் திங்கள்கிழமை பதாகை அகற்றப்பட்டதால் அதிருப்தியடைந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் ரயிலடி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தொல். திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, பதாகை அமைத்திருந்தனா். அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பதாகையை மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை அகற்றினா்.
இதனால் அதிருப்தியடைந்த விசிகவினா், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்திலும், பின்னா் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களைச் சமாதானப்படுத்தி, அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா் வழிவிடுமாறு கூறியதால், அவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை சமாதானப்படுத்த வந்த காவல் துறையினருக்கும், இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இளைஞரை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் அப்துல் ரஹீம் தாக்கியதால், பதிலுக்கு அப்துல் ரஹீமை அந்த இளைஞரும் தாக்கினாா்.
இதையடுத்து, இளைஞரை மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதில், அவா் தஞ்சாவூா் அருகே விளாா் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் ஆகாஷ் (26) என்பது தெரிய வந்தது. தொடா்ந்து அவரை கைது செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.