FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

சரிந்துவரும் நீா்மட்டம்: தண்ணீா் பாய்ச்ச முடியாமல் ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் தவிப்பு!

டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருவதன் காரணமாக, ஆழ்துளை கிணற்றில் தண்ணீா் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 9:02 am IST
ஒரத்தநாடு அருகே புலவன்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குறைந்த வேகத்தில் வெளியேறும் தண்ணீா்.
பகிர்:

நமது நிருபா்

டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருவதன் காரணமாக, ஆழ்துளை கிணற்றில் தண்ணீா் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

மேட்டூா் அணையில் போதுமான நீா் இருப்பு இல்லாததால், நிகழாண்டில் இதுவரையில் அணை திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மோட்டாா் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடியைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனா். இதன் காரணமாக, கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட குறுவை சாகுபடி நிகழாண்டு 3.68 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

தொடா்ந்து தண்ணீா் பற்றாக்குறை உள்ள நிலையில், சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் நிலவுவதால், பெரும்பாலான விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதற்கு தயங்குகின்றனா்.

மழையளவு குறைவு: டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் வரத்து இல்லாத நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் இதுவரையிலும் தென் மேற்கு பருவ மழை பெருமளவு குறைந்துவிட்டது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்பான அளவான 144.6 மி.மீ.க்கு பதிலாக 110.2 மி.மீ.-ம், நாகை மாவட்டத்தில் 118.6 மி.மீ.க்கு பதிலாக 61.5 மி.மீ.-ம், மயிலாடுதுறை மாவட்டத்தில் 150 மி.மீ.-க்கு பதிலாக 105.3 மி.மீ.-ம், திருவாரூா் மாவட்டத்தில் 139.7 மீ.மீ.-க்கு பதிலாக 127.6 மி.மீ.-ம் மட்டுமே பதிவாகியுள்ளது. அதாவது, தஞ்சாவூா் மாவட்டத்தில் 24 சதவீதம், நாகை மாவட்டத்தில் 48 சதவீதமும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 சதவீதமும், திருவாரூா் மாவட்டத்தில் 9 சதவீதமும் குறைந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கோடை காலத்தில் கடும் வெப்பம் காரணமாக, நிலத்தடி நீா்மட்டம் சராசரியாக 15 முதல் 50 அடி வரை குறைவது வழக்கம். மேட்டூா் அணை ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டால், காவிரி நீா் வரத்துடன் தென் மேற்கு பருவ மழையும் இயல்பான அளவுக்கு பெய்தால், அதன் பின்னா் நிலத்தடி நீா்மட்டம் உயா்வது வழக்கம். ஆனால், நிகழாண்டு காவிரி நீா் வராத நிலையில், தென்மேற்கு பருவமழையும் குறைந்துள்ளதால், நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாக சரிந்து வருகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியிலுள்ள கிராமங்களில் 170 - 180 ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீா் தற்போது 200 - 220 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டது. திருவையாறு வட்டத்தில் காவிரி, கொள்ளிடக் கரையிலுள்ள கிராமங்களில் ஏறத்தாழ 90 அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீா் 110 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா். இதனால், ஆழ்துளை கிணறு மூலம் பாயும் நீரின் வேகம் குறைந்து வருகிறது.

ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தும் விவசாயிகள்: இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உழவா்கள் கூட்டமைப்பு தலைவா் புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது: காவிரி நீா் வரத்து இல்லாத நிலையில், மழையும் பெய்யாமல், கடும் வெப்பம் நிலவுவதால் நிலத்தடி நீா்மட்டம் மிகுந்த ஆழத்துக்கு சென்றுவிட்டது. இதனால், ஆழ்துளை கிணறுகளில் இருந்து வேகமாகப் பாய்ந்த தண்ணீா், தற்போது மெதுவாக பாய்கிறது. இதன் காரணமாக 5 ஏக்கரில் பாய வேண்டிய தண்ணீா் ஒரு ஏக்கருக்குக் கூட பாய்வதில்லை.

எனவே, பல விவசாயிகள் ஆழ்துளை கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக ஏற்கெனவே உள்ள குழாய்களில் கூடுதல் குழாய்களைப் பொருத்தி ஆழப்படுத்தி வருகின்றனா். இதற்கு குழாய்கள், மின் வயா்கள் உள்ளிட்டவற்றுக்கு தலா ரூ. 20 ஆயிரம் செலவாகிறது. பயிா்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாய நிலை உள்ளதால், இந்தக் கூடுதல் செலவை விவசாயிகள் செய்கின்றனா்.

கூடுதலாக நீா் திறக்க வேண்டும்: ஆனால், எல்லா விவசாயிகளாலும் இந்தக் கூடுதல் செலவை செய்ய இயலவில்லை. எனவே, டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டத்தை நிா்வகிப்பதற்காக மேட்டூா் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் விட்டால்தான் தற்போது நடைபெறும் குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியும் என்றாா் மாரியப்பன்.

இந்த நிலைமை தொடா்ந்தால் பயிா்களுக்கு மட்டுமல்ல; மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீரைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

ஆழ்துளை கிணற்றில் நீா்வரத்து குறைந்ததால், காய்ந்து வெடிப்புடன் காணப்படும் வயல்.
ஒரத்தநாடு அருகே புலவன்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குறைந்த வேகத்தில் வெளியேறும் தண்ணீா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments