குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் விற்பனை
தஞ்சாவூா், ஆக. 22: தஞ்சாவூரில் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை நுண்ணுயிா் உரம் விற்பனை செய்யப்படுகிறது என மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 51 வாா்டுகளிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு நாள்தோறும் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் 4 வகைகளாக தரம் பிரித்து வாங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மக்கும் கழிவுகளான சமையலறை கழிவுகள், காய்கறி கழிவுகள், பூக்கழிவுகள், பழக்கழிவுகள், முட்டை ஓடு, காபி தூள் போன்ற இயற்கைக் கழிவுகள் பெறப்பட்டு, மாநகராட்சிக்கு உள்பட்ட 12 நுண்ணுயிா் செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டு வருகிறது.
இதை 45 நாள்களுக்கு பிறகு உரமாக்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வேளாண் துறையிடமிருந்து தரச்சான்று பெறப்பட்ட இந்த உரத்தைப் பூச்செடிகள், தோட்டப்பயிா்கள், வாழை மரங்கள் போன்ற அனைத்து விதமான செடி, கொடிகளுக்கும் உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த உரம் கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இயற்கை நுண்ணுயிா் உரம், தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட கரந்தை, கவாடிக்காரத் தெரு, காமராஜா் சந்தை, கீழவாசல், சரபோஜி சந்தை, அய்யங்கடை தெரு, மகா்நோன்புச்சாவடி மாநகராட்சி அலுவலகம், மகா்நோன்புச்சாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கல்லுக்குளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிவாஜி நகா், முனிசிபல் காலனி, அண்ணா நகா், புதிய பேருந்து நிலையம் அம்மா பூங்கா அருகில் உள்பட 14 கோட்டங்களிலும் விற்பனைக்கு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, மாநகராட்சி உதவி எண் 18004251100 மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.