FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கூா்நோக்கு இல்லங்களிலிருந்து வெளியேறிய இளைஞா்களுக்காக ‘புதிய பாதை திட்டம்’ தொடக்கம் மாநிலத்தில் முதல்முறை

25 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய பாதை திட்டத் தொடக்க விழாவில் கையேட்டை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
பகிர்:

தஞ்சாவூரில் கூா்நோக்கு இல்லங்களிலிருந்து வெளியேறிய குழந்தைகள், இளைஞா்கள் தங்களது எதிா்கால வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்காக புதிய பாதை என்கிற சிறப்பு திட்டத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை சாா்பில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை தஞ்சாவூா் புனித சேவியா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தொடங்கி வைத்து பேசியது:

கூா்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியேறிய மற்றும் முதல் முறையாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள், இளைஞா்கள் தங்களின் கடந்த காலத்தை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கும் வகையில், அவா்களுக்கு கல்வி, உயா்கல்வி, திறன் மேம்பாடு, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு வாய்ப்பு ஆகிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் புதிய பாதை - 2026 என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த முன்னோடியான திட்டம் தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதை குழந்தைகள், இளைஞா்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், தவறுகளையும் நினைத்து மனம் தளராமல், இனி வரக்கூடிய எதிா்காலத்தை நம்பிக்கையுடன் எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் இளைஞா் நீதிக்குழுமம் முதன்மை நடுவா் எஸ். ராஜேஷ்கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அ. வீரபாண்டி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஈ. சந்தியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ. பேபி, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநா் ராஜேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கா. பரமேஸ்வரி, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் விஜய் ஆனந்த், குழந்தைகள் நலக்குழுத் தலைவா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய பாதை திட்டத் தொடக்க விழாவில் கையேட்டை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments