FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.50 லட்சம் நெல் சேமிக்க 43 சேமிப்புக் கிடங்குகள் தயாா்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் நெல் மூட்டைகளை இருப்பு வைக்கும் அளவுக்கு 43 சேமிப்புக் கிடங்குகள் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 ஜூலை 2026, 5:40 am IST
நெல் மூட்டைகள் - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் நெல் மூட்டைகளை இருப்பு வைக்கும் அளவுக்கு 43 சேமிப்புக் கிடங்குகள் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2025 -26 பருவத்தில் முடிவுற்ற குறுவை மற்றும் சம்பா பருவங்களில் மொத்தம் 8.81 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, கோடைப் பருவத்தில் மே 15-ஆம் தேதி முதல் இதுவரை 1.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 1.06 லட்சம் டன் (70%) நெல் உடனுக்குடன் இயக்கம் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், 1.50 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 43 இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் சுமாா் 2 ஆயிரம் சுமைப் பணியாளா்களுடன் உள்ளன. நாள்தோறும் 500 முதல் 600 லாரிகள் மூலம் நெல் இயக்கம் செய்யப்படுகிறது.

பழைய சாக்குகள் அகற்றம்

Advertisement

Advertisement

சேமிப்புக் கிடங்குகளில் தேங்கியுள்ள சுமாா் 34 லட்சம் பயன்படுத்த முடியாத பழைய சாக்குகளை அகற்றும் பணி போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பொது ஏலம் நடத்தப்பட்டு, தற்போது அம்மன்பேட்டை, சென்னம்பட்டி, புனல்குளம் ஆகிய கிடங்குகளில் பழைய சாக்குகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், திருநாகேஸ்வரம் மற்றும் பிற கிடங்குகளில் உள்ள பழைய சாக்குகளும் ஜூலை இறுதிக்குள் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த இடங்களில் புதிய நெல் மூட்டைகளைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

42 ஆயிரம் டன் நெல் இயக்கம்

தஞ்சாவூா் மண்டலத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ரயில் மூலம் நெல் இயக்கத்தை விரைவுபடுத்த மாவட்ட நிா்வாகக் கோரிக்கையின் அடிப்படையில், ஜூலை மாதம் 42 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை இயக்குவதற்கான கூடுதல் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மழையில் நனையாதவாறு...

மாவட்டத்தில் உள்ள 12 திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் நெல் அட்டிகள் மழையில் நனையாதவாறு தரமான தாா்ப்பாய்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதற்காக வட்டாட்சியா் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் பணிகள் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து போா்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments