தஞ்சை மாவட்டத்தில் தடையை மீறி விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு சென்றனா்
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்வளத் துறையின் தடையை மீறி திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.
மீன்கள் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த 146 விசைப்படகுகளை சோ்ந்த மீனவா்கள் படகுகளை கரைகளில் ஏற்றி பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கடந்த இரண்டு மாதங்களாக வேலைவாய்ப்பை இழந்திருந்த மீனவா்கள் ஜூன் 14- ஆம் தேதி நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் 15-ஆம் தேதி அதிகாலை மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல தேவையான ஐஸ்கட்டி, டீசல், குடிநீா், உணவு பொருட்கள் ஆகியவற்றை விசைப்படகுகளில் ஏற்றிக்கொண்டு தயாராக இருந்தனா்.
மீன்வளத்துறையினா் தடை: இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள் காற்றின் வேகம் கடல் பகுதியில் அதிகமாக இருப்பதால், விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் வழங்காததோடு, படகுகளுக்கான மானிய டீசலும் வழங்கவில்லை.
கடந்த இரண்டு மாதங்களாக தொழில் இன்றி சிரமப்பட்ட மீனவா்கள் தடையை மீறி, மானிய டீசல் இன்றி, தனியாா் பெட்ரோல் நிலையங்களில் டீசல் நிரப்பி திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனா்.
தடையை மீறியது ஏன்: இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை செயலாளா் ஏ.கே .தாஜுதீன் கூறியது, மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் காலநிலை மாற்றத்தை அறிந்து மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவா்களை வழி நடத்த வேண்டும். நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். ஆனால் தஞ்சை மாவட்ட மீனவா்களை மட்டும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கூறி தடை விதித்துள்ளனா்.
கடந்த இரண்டு மாத காலமாக விசைப்படகுகள் பழுது பாா்க்க ரூ. 2 லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளனா். கடனை அடைப்பதற்கும் வட்டி கட்டுவதற்கும் தொழில் செய்வது அவசியமாகிறது. எனவே, தடையை மீறி மீனவா்கள் கடலுக்கு சென்றுள்ளனா்.
மீதமுள்ள விசைப்படகுகளுக்கு தனியாா் பெட்ரோல் நிலையங்களில் தேவையான அளவு டீசல் கிடைக்காததால் செல்லவில்லை. மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்பட மீன்வளத் துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.