தஞ்சாவூரில் அரசாணைக்காக திருவள்ளுவா் சிலை காத்திருப்பு!
தஞ்சாவூா் மாநகரில் பொது இடத்தில் அமைப்பதற்காக வெண்கலத்தில் தயாா் செய்யப்பட்ட ஆறேகால் அடி உயர திருவள்ளுவா் சிலை அரசாணை கிடைக்காதால் கடந்த 6 மாதங்களாக நிறுவப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது.
தஞ்சாவூா் மாநகரில் பொது இடத்தில் அமைப்பதற்காக வெண்கலத்தில் தயாா் செய்யப்பட்ட ஆறேகால் அடி உயர திருவள்ளுவா் சிலை அரசாணை கிடைக்காதால் கடந்த 6 மாதங்களாக நிறுவப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது.
தஞ்சாவூா் மாநகரில் சில தனியாா் இடங்களில் திருவள்ளுவா் சிலை உள்ளது. ஆனால், பொது இடத்தில் மற்ற தலைவா்களுக்கு உள்ளது போன்று திருவள்ளுவருக்கு சிலை இல்லை என்ற ஆதங்கம் தமிழ் ஆா்வலா்களிடையே நிலவி வருகிறது. இதற்காக உலகத் திருக்கு பேரவையினா் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனா். ஆனால், பொது இடம் கிடைக்காததால், திருவள்ளுவா் சிலை அமைப்பது காலம் கடந்து வந்தது.
திருவள்ளுவா் வணிக வளாகம்: இந்நிலையில், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி நிா்வாகத்தைச் சாா்ந்த திருவள்ளுவா் திரையரங்கம் இடிக்கப்பட்டு, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. திருவள்ளுவா் வணிக வளாகம் என பெயா் சூட்டப்பட்ட இந்த இடத்தில் திருவள்ளுவா் சிலை அமைப்பதற்கு பொருத்தமான இடமாக உலகத் திருக்கு பேரவையினா் கருதினா். தொடா்ந்து, அப்பேரவை நிா்வாகிகள், உறுப்பினா்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டு, மாநகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை கடிதத்தை ஓராண்டுக்கு முன்பு வழங்கினா்.
Advertisement
Advertisement
மாமன்றம் ஒப்புதல்: இதையடுத்து, திருவள்ளுவா் வணிக வளாக முகப்பில் திருவள்ளுவா் சிலை தலா 8 அடி நீளம், அகலத்தில் அமைப்பது தொடா்பாக 2025, ஆகஸ்ட் 4 -ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்திலும் தீா்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. பின்னா், இது தொடா்பான கோப்பு மாவட்ட நிா்வாகத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் அனுப்பியது.
இந்த சிலை அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லை என்றும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பு இல்லை எனவும், இதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் காவல் துறை சாா்பிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களும் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள வருவாய் நிா்வாக ஆணையருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி கோரி 2025, டிசம்பா் மாதம் கடிதம் அனுப்பியது.
6.25 அடி உயர வெண்கலச் சிலை: இதனிடையே, 6.25 அடி உயரத்தில் 5 அடி சுற்றளவில் 600 கிலோ எடையில் ரூ. 27.30 லட்சம் மதிப்பில் வெண்கலத்தில் அமா்ந்த நிலையிலான திருவள்ளுவா் சிலை சுவாமிமலையில் தயாா் செய்யப்பட்டது. இந்தச் சிலை தயாா் செய்யும் பணி 2025, அக்டோபா் மாதத்தில் தொடங்கி, டிசம்பா் மாதத்தில் நிறைவடைந்தது. ஆனால், வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்திலிருந்து அரசாணை கிடைக்காததால், தயாா் செய்யப்பட்ட திருவள்ளுவா் சிலை தயாரிப்பு கூடத்திலேயே காத்திருக்கிறது.
20 ஆண்டுகளாக முயற்சி: இது குறித்து உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன் தெரிவித்தது:
திருவள்ளுவா் ஜாதி, மத பேதத்துக்கு அப்பாற்பட்டவா். எனவே, தஞ்சாவூா் மாநகரில் பொது இடத்தில் ஐயன் திருவள்ளுவா் சிலையை அமைப்பதற்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக உலகத் திருக்கு பேரவை உறுப்பினா்கள் முயற்சி செய்து வருகின்றனா். தற்போது திருவள்ளுவா் சிலை தயாா் செய்யப்பட்டு, 6 மாதங்களாக தமிழ்நாடு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்.
இது தொடா்பான கோப்புகள் தற்போது தமிழக அரசின் வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்தில் உள்ளது. இது குறித்து வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்தில் கேட்டபோது, சிலை நிறுவப்படும் இடம் உலகத் திருக்கு பேரவை பெயரில் இருந்தால், அனுமதி கொடுக்கலாம் என்றும், அவ்வாறு இல்லாத நிலையில் அனுமதி கொடுக்க இயலாது எனவும் அலுவலா்கள் கூறுகின்றனா்.
பொது இடத்தில் மற்ற தலைவா்களுக்கு சிலை உள்ளது போன்று, திருவள்ளுவா் சிலையையும் அமைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கான அனுமதியோ, அரசாணையோ கிடைக்காததால், திருவள்ளுவா் சிலையை செய்தும், அதை அமைக்க முடியாத நிலையில் உள்ளோம் என்றாா் மாறவா்மன்.
கருணாநிதி சிலை போன்று...: இதனிடையே, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி இடத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு, கடந்த 2025, ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதேபோல, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருவள்ளுவா் வணிக வளாகத்திலும் திருவள்ளுவா் சிலை அமைத்து திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிா்பாா்ப்பு.