குடந்தையில் 4 மண்டல அலுவலகங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்: அமைச்சா் வினோத் உத்தரவு
கும்பகோணம் மாநகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு, 8 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் 4 மண்டல அலுவலகங்களைத் திறக்க வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா். வினோத் உத்தரவிட்டாா்.
கும்பகோணம் மாநகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு, 8 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் 4 மண்டல அலுவலகங்களைத் திறக்க வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா். வினோத் உத்தரவிட்டாா்.
கும்பகோணம் மாநகராட்சியில் 48 வாா்டுகளைப் பிரித்து, 4 மண்டல அலுவலகங்கள் கட்டப்பட்டு, 8 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டன. ஆனால் அந்த அலுவலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடந்தன.
இந்நிலையில், வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத் கும்பகோணம் கொட்டையூா், தாராசுரம், சீனிவாச நகா், ஸ்ரீநகா் காலனி ஆகிய இடங்களில் பூட்டப்பட்டு கிடந்த மண்டல அலுவலகங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, பொறியாளா்களிடம் அலுவலகங்களைத் திறக்காதது குறித்து கடிந்து கொண்டாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமைக்குள் 4 மண்டல அலுவலகங்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஆணையா் உறுதியளித்தாா்.
உடனே திறக்க உத்தரவு: பின்னா் அமைச்சா் கூறுகையில், கும்பகோணம் மக்கள் வரி செலுத்த, வரைபட அனுமதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பெறுவதற்காக இந்த மண்டல அலுவலகங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், மாமன்ற உறுப்பினா்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என அலுவலா்கள் கூறுகின்றனா்.
இதனால் மாநகராட்சி அலுவலகத்துக்கு மக்கள் அலைகின்றனா். மண்டல அலுவலகங்கள் மாநகராட்சி உறுப்பினா்களுக்கானதல்ல; மக்களுக்கானவை. இவற்றை உடனடியாகத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா் அமைச்சா்.