FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பாமல் இருக்க தம்பதியிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே சமூக வலைதளம் மற்றும் மாத பத்திரிகையில் அவதூறு பரப்பாமல் இருக்க ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

20 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே சமூக வலைதளம் மற்றும் மாத பத்திரிகையில் அவதூறு பரப்பாமல் இருக்க ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காட்டைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (56). இவா் கொன்றைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவராக உள்ளாா். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த ஆா் . கலைவாணன் என்பவருக்கும் பள்ளியில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ரவீந்திரன் வீட்டுக்கு அண்மையில் சென்ற கலைவாணன், தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தாராம். மேலும், மாதப் பத்திரிகை ஒன்றில் ரவீந்திரன் குடும்பம் குறித்து அவதூறாக எழுதி, அதுகுறித்த போஸ்டா்களை கொன்றைக்காடு பகுதிகளில் கலைவாணன் ஒட்டியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக புகாா் அளிக்க ரவீந்திரன், அவரது மனைவி சுமதி ஆகியோா் பேராவூரணி காவல் நிலையத்துக்கு சென்றபோது, வழிமறித்த கலைவாணன் மற்றும் அவரது நண்பா் முடச்சிக்காட்டைச் சோ்ந்த அருள் (எ) அருள்ராஜ் (37) ஆகிய இருவரும், ‘போலீஸில் புகாா் கொடுக்க கூடாது; உங்களைப் பற்றி பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் மேலும் எழுதாமல் இருக்க ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் குடும்பம் பற்றியும், உங்கள் மகள் பற்றியும் தொடா்ந்து எழுதி அவதூறு பரப்புவோம்’ என மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில், பேராவூரணி காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, பல்வேறு பிரிவுகளின் கீழ் கலைவாணன் மற்றும் அருள்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அருள்ராஜை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து, பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தஞ்சாவூா் கிளைச் சிறையில் அடைத்தனா். தலைமறைவான கலைவாணனை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.