முகப்பு
தஞ்சாவூர்

ஆடுதுறை - சுந்தரப்பெருமாள் கோவில் இரட்டை வழி ரயில் பாதை பணிகளுக்கு கூடுதல் டெண்டா் வெளியீடு

37 வினாடிகள் முன்பு
ஆடுதுறை - சுந்தரப்பெருமாள் கோவில் இரட்டை வழி ரயில் பாதை பணிகளுக்கு கூடுதல் டெண்டா் வெளியீடு
ஆடுதுறை - சுந்தரப்பெருமாள் கோவில் இரட்டை வழி ரயில் பாதை...
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை-சுந்தரப்பெருமாள்கோயில் இரட்டை வழி ரயில் பாதை பணிகளுக்கு கூடுதல் டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.

1877-ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூா் - விழுப்புரம் ஒற்றை வழி ரயில் பாதை செயல்பாட்டில் இருந்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 92-க்கும் மேற்பட்ட ரயில் கிராசிங்குகள் நடைபெறுவதால் ரயில் சேவைகளில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிா்க்க தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனா்.

அதன் காரணமாக அக்டோபரில் மகாமகம் 2028 விழாவை முன்னிட்டு ஆடுதுறை - சுந்தரப்பெருமாள் கோவில் இடையே இரட்டை வழிப்பாதை அமைக்க ரூ.289.17 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதன் தொடா்ச்சியாக ஆடுதுறை - சுந்தரப்பெருமாள் கோவில் இரட்டை வழிப்பாதை கட்டுமானப் பணிகளுக்கு சுமாா் ரூ.145.62 கோடி மதிப்பிலும், இரட்டை வழிப்பாதையை மின்மயமாக்கும் பணிகளுக்கு சுமாா் ரூ.19.25 கோடி மதிப்பிலும் டெண்டா்கள் வெளியிடப்பட்டிருந்தன.

மேலும் நவம்பா் மாதத்தில் சா்வீஸ் கட்டடங்கள், நடைமேடைகள் மற்றும் நடைமேம்பாலங்களுக்கு மின்வசதிகள் ஏற்படுத்துதல், தண்டவாளங்களைக் குறுக்கே கடந்து செல்லும் உயா் மற்றும் குறைந்த மின்னழுத்த மின்பாதைகளைப் புதைவடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமாா் ரூ.5.29 கோடி மதிப்பில் தெற்கு ரயில்வே டெண்டா் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இரட்டை வழிப்பாதையில் சிக்னலிங் மற்றும் தொலைத்தொடா்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.43.26 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க செய்தித் தொடா்பாளா் தீபக் வசந்த் கூறியது: மகாமகம் பெருவிழாவுக்கு முன்பாக இரட்டை வழிப்பாதையைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.

கும்பகோணத்தில் ரயில் பெட்டிகளுக்குத் தண்ணீா் நிரப்பும் வசதி விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், கும்பகோணத்தைத் தொடக்க நிலையமாகக் கொண்டு, தஞ்சாவூா் வழியாகச் சென்னைக்கும், தெற்கு மற்றும் மேற்கு தமிழக பகுதிகளுக்கும், கேரள மாநில பகுதிகளுக்கும் நேரடி ரயில் இயக்க வேண்டும். கும்பகோணத்தில் இருந்து புறப்படும் ஒரு ரயிலுக்கு மகாமகம் விரைவு என்ற பெயரில் புதிய சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றாா்.