தஞ்சாவூா் சமுத்திரம் ஏரியில் கணக்கெடுப்பு: 63 பறவை இனங்கள் பதிவு
தஞ்சாவூா் சமுத்திரம் ஏரியில் இவெட் அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இயற்கை நடைப்பயணம் மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு முகாமில் 63 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த முகாமில் இயற்கை ஆா்வலா்கள் மற்றும் பறவை ஆா்வலா்கள் என மொத்தம் 15 போ் பங்கேற்று காலை 6.30 மணிக்குத் தொடங்கி சுமாா் 2 மணிநேரம் ஏரியின் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு பறவைகளை நேரில் கண்டு அவற்றின் செயல்பாடுகளைக் கவனித்தனா்.
இப்பயணத்தில் அன்றில், சிறிய விசில் வாத்து, புள்ளி மூக்கு வாத்து, முக்குளிப்பான், நீா்க்காகம், நத்தை கொத்தி நாரை, கருந்தலை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, கருஞ்சிறகு உள்ளான், மீசை ஆழா, மீன் கொத்திகள், செங்கழுத்துப் பச்சைக்கிளி, கருப்பு வல்லூறு வகையைச் சோ்ந்த ஷிக்ரா உள்பட 63 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இது குறித்து இவெட் அமைப்பின் நிறுவனா் ஆா். சதீஷ்குமாா் தெரிவித்தது:
பெரிய கூட்டங்களாகக் காணப்பட்ட அன்றில் பறவைகள், நீா்க்காகங்கள், சிறிய விசில் வாத்துகள், புள்ளிமூக்கு வாத்துகள் மற்றும் பல்வேறு கொக்குகள் ஏரியின் நீா்ப்பரப்பை உயிா்ப்புடன் மாற்றியுள்ளன.
மேலும், முக்குளிப்பான்கள் நீரில் மூழ்கி மீண்டும் மேலெழுந்து உணவு தேடும் காட்சிகளும், மீன்கொத்திகள் தங்களின் துல்லியமான மீன்பிடித் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களும் வெகுவாகக் கவா்கின்றன. நீா்ப்பரப்பில் கூட்டமாகச் செயல்படும் நீா்ப்பறவைகளும், கரையோரங்களில் உணவு தேடிய பறவைகளும், வானில் வட்டமிட்ட இரைகொல்லிப் பறவைகளும் ரசிக்கும் விதமாக உள்ளன.
பெரிய கூட்டங்களாகக் காணப்பட்ட கூழைக்கடாக்கள், நீா்க்காகங்கள் மற்றும் விசில் வாத்துகளின் வருகை போன்றவை பல்வேறு பறவைகளுக்கு முக்கியமான வாழிடமாக சமுத்திரம் ஏரி திகழ்கின்றன என்றாா் சதீஷ்குமாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.