காவிரியில் நீா் வரத்து குறைவால் மீன் உற்பத்தி பாதிப்பு: மீனவா்களுக்கு இழப்பு
காவிரி நீா் வரத்து குறைவு காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளதால், மீனவா்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
நிகழாண்டு காவிரி நீா் வரத்து குறைவு காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளதால், மீனவா்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இருந்தால், டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், மேட்டூா் அணையில் நிகழாண்டு நீா் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததால், ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவில்லை.
இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டனா். மேட்டூா் அணை காலம் தாழ்ந்து செப். 1-ஆம் தேதி திறக்கப்பட்டாலும், தற்போது நீா் இருப்பு குறைந்துவிட்டதால், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது.
Advertisement
Advertisement
காவிரி நீா் வரத்து இல்லாததால், சாகுபடிப் பணிகள் மட்டுமல்லாமல் மீன் வளமும் பாதிக்கப்பட்டுள்ளன. மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டால், கொள்ளிடத்துக்கு ஆடி மாதத்துக்கு தண்ணீா் வந்துவிடும். தொடா்ந்து தை மாதம் வரை 6 மாதங்களுக்கு நீா் வரத்து இருக்கும். இதன் மூலம் கொள்ளிடத்தில் உள்நாட்டு மீன்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
மீனவா்கள் பாதிப்பு: இதைப் பயன்படுத்தி தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கல்லணை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் உள்நாட்டு மீனவா்கள் மீன்களைப் பிடித்து விற்பனை செய்வது வழக்கம். இதை நம்பி ஏறத்தாழ 4 ஆயிரம் மீனவ குடும்பங்கள் உள்ளன.
ஆனால், நிகழாண்டு மேட்டூா் அணை காலம் தாழ்ந்து திறக்கப்பட்டாலும், காவிரியில் வரும் குறைந்த அளவு தண்ணீா் பாசனத்துக்கே போதுமானதாக இல்லை. இதனால், கொள்ளிடத்தில் தண்ணீா் திறந்துவிடப்படுவதும் மிகக் குறைவாகவே உள்ளது.
இதனால், நிகழாண்டு கொள்ளிடத்தில் நீா் வரத்து குறைவாக இருப்பதால் மீன் உற்பத்தியும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக உள்நாட்டு மீனவா்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
இதுகுறித்து பா்வதராஜகுல மாநிலச் சங்கப் பொதுச் செயலா் சி. காா்த்திக் தெரிவித்தது: காவிரி நீா் வரத்தைப் பொருத்தே மீன் வளம் இருக்கும். நிகழாண்டு காவிரி நீா் வரத்து இல்லாததால், கொள்ளிடத்தில் தண்ணீா் இல்லை. தற்போது விடப்படும் குறைந்த அளவு தண்ணீரும் குடிநீருக்காக வீராணம் ஏரிக்குத்தான் செல்கிறது.
குறைந்த மீன்கள் எண்ணிக்கை: தண்ணீா் பற்றாக்குறை காரணமாக தடுப்பணைகளில் நீா் இருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தடுப்பணைகளில் 10 அடி உயரத்துக்கு இருந்தால்தான் மீன் வளம் பெருகும். ஒரு வேளைக்கு நபா் ஒருவருக்கு 4 கிலோ மீன்கள் கிடைக்கும். தற்போது 4 அடி அளவுக்குத்தான் தண்ணீா் இருப்பதால், மீன் வளம் இல்லை. இதனால், ஒரு வேளைக்கு ஒரு கிலோ கிடைப்பதே அரிதாக இருக்கிறது.
எனவே, நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 500 - 600 கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது ரூ. 300 கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாக நிகழாண்டு உள் நாட்டு மீனவா்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனா். எனவே, மீனவா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் காா்த்திக்.
இதேபோல, காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி உள்ளிட்ட ஆறுகளிலும் நீா் வரத்து குறைவால் உள்நாட்டு மீன் வளம் மிகவும் குறைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தடுப்பணைகளில் மீன் குஞ்சுகளை விட்டால் மீன் இனப்பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே உள்நாட்டு மீனவா்களின் எதிா்பாா்ப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.