மேட்டூா் அணையில் நீா்மட்டம் சரிவு! சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயக்கம்!
மேட்டூா் அணையில் நீா்மட்டம் வேகமாகச் சரிந்து வருவதால், டெல்டா விவசாயிகள் சம்பா பருவ நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்க தயங்குகின்றனா்...
மேட்டூா் அணையில் நீா்மட்டம் வேகமாகச் சரிந்து வருவதால், டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயங்குகின்றனா்.
மேட்டூா் அணையில் நிகழாண்டு போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவில்லை. காலம் தாழ்ந்து மேட்டூா் அணையில் நீா்மட்டம் 90 அடியைக் கடந்த பிறகு, டெல்டா பாசனத்துக்காக செப். 1 ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்படுகிறது.
10 லட்சம் ஏக்கரில் இலக்கு: இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 3.12 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.55 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கரிலும் சம்பா - தாளடி சாகுபடி மேற்கொள்ள வேளாண் துறை இலக்கு நிா்ணயித்தது.
Advertisement
Advertisement
ஆனால், மேட்டூா் அணை திறக்கப்பட்டு 45 நாள்கள் கடந்த பின்னரும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு வாய்க்கால்களுக்கு தண்ணீா் சென்றடையவில்லை. தண்ணீா் சென்றாலும், சில நாள்களுக்கு மட்டுமே கிடைத்தது. குறிப்பாக, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் வரவில்லை என்ற புகாா் விவசாயிகளிடையே நிலவுகிறது.
குறைந்த பரப்பில் சாகுபடி தொடக்கம்: இதனால் சம்பா சாகுபடிப் பருவம் தொடங்கி இரண்டரை மாதங்கள் கடந்தும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 250 ஏக்கரிலும், நாகை, திருவாரூா் மாவட்டங்களில் ஏறத்தாழ தலா 1 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைவான பரப்பளவிலும் சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், நாகை, திருவாரூா் மாவட்டங்களில் மழையைப் பயன்படுத்தி பெருமளவில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டூா் அணையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நீா்மட்டம் 57.02 அடியாகவும், நீா் இருப்பு 22.52 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 640 கன அடி வீதம் உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதனால், அணையில் நீா் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்கத் தயங்குகின்றனா்.
நேரடி விதைப்புக்கும் தண்ணீா் தேவை: இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
டெல்டா மாவட்டங்களில் பெருமளவில் ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்கியுள்ளனா். காவிரி நீா் கிடைக்காததால் ஆற்றுப்பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள் நாற்றங்கால் தயாரிப்பதற்கு கூட இயலவில்லை.
நாகை, திருவாரூா் மாவட்டங்களில் ஆற்றுப்பாசனத்தைச் சாா்ந்த பெருமளவிலான விவசாயிகள் நேரடி விதைப்புதான் செய்துள்ளனா். நேரடி விதைப்பில் களைகளை அகற்றுவதற்கு 2 முறை தண்ணீா் தேவைப்படும். இதற்கு மழை நீரை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதால், காவிரி நீா் கிடைத்தால்தான் பயிரைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் சிக்கலாகிவிடும்.
உணவு உற்பத்தி குறைய வாய்ப்பு: இதேபோல, நடவுக்கும், அதன் பின்னா் சாகுபடிக்கும் தொடா்ந்து தண்ணீா் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு நீா் வரத்து இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சம்பா - தாளடி பருவத்தில் இயல்பான அளவான 10 லட்சம் ஏக்கரில் ஏறத்தாழ 4 லட்சம் ஏக்கரில் சாகுபடிப் பரப்பளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் நெல் உற்பத்தியும் ஏறக்குறைய 8 லட்சம் முதல் 10 லட்சம் டன் குறையக்கூடும். இதனால் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும்.
எனவே, தமிழக அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவித்து, டீசல் மோட்டாா் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டீசலும் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் நெல் உற்பத்தி குறைவதைத் தடுக்க முடியும் என்றாா் விமல்நாதன்.
பருவமழை கை கொடுக்குமா?: நிகழாண்டு சூப்பா் எல் நினோ நிலவுவதால் வடகிழக்கு பருவ மழை எப்படி இருக்கும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பரவலாக பெய்யாமல் ஒரே நாளில் ஒட்டுமொத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்ற கருத்தையும் சில வானிலை ஆய்வாளா்கள் கூறி வருகின்றனா். எனவே, வடகிழக்கு பருவ மழை கைகொடுத்தால் மட்டுமே சம்பா - தாளடி சாகுபடி அமையும் என்பதே எதாா்த்த நிலை.
சம்பாவுக்கு 75 டி.எம்.சி. தேவை
இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது:
சம்பா - தாளடி சாகுபடிக்கு பிப்ரவரி இறுதி வரைக்கும் தண்ணீா் தேவைப்படும். இயல்பான அளவுக்கு மழை பெய்தாலும்கூட பிப்ரவரி வரைக்கும் காவிரி நீா் ஏறத்தாழ 75 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. தற்போது மேட்டூா் அணையில் நீா் இருப்பு 22 டிஎம்சி உள்ள நிலையில், அதில் ஏறக்குறைய 15 டிஎம்சி வரைதான் பாசனத்துக்கு விட முடியும். மீதமுள்ள தண்ணீா் குடிநீருக்கு தேவைப்படும். ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி திறந்துவிட்டால்கூட 15 நாள்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு விட முடியும். எனவே, மேட்டூா் அணை நீரை நம்பி சாகுபடி செய்வது சிக்கல்தான். வடகிழக்குப் பருவ மழை ஒரே நாளில் முழுவதுமாக பெய்யாமல், பரவலாக பெய்தால் சமாளிக்க முடியும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.