FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் மகாமகத் திருவிழாவுக்கு ரூ.600 கோடி தேவை: அமைச்சா் சீ.ரமேஷ் பேட்டி

கும்பகோணத்தில் 2028-இல் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவுக்கு ரூ.600 கோடி தேவைப்படும். அதனை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்தாா்.

11 செப்டம்பர் 2026, 4:30 am IST
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள சோடச மகாலிங்க கோயிலில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் சீ.ரமேஷ், ஆா்.வினோத். உடன், ஆட்சியா் இரா.ரேவதி உள்ளிட்டோா்.
பகிர்:

கும்பகோணத்தில் 2028-இல் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவுக்கு ரூ.600 கோடி தேவைப்படும். அதனை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ‘2028-மகாமகத் திருவிழா பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள மகாமக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த மகாமகத் திருவிழாவில் சுமாா் 40 லட்சம் பக்தா்கள் பங்கேற்றனா். 2028-இல் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவில் 70 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மகாமகத் திருவிழா தொடா்பான பணிகளைத் தொடங்கியுள்ளோம். இதுதொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். அந்தந்த துறை அதிகாரிகள், தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனா். இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுமாா் 50 லட்சம் போ் ரயில் மூலம் கும்பகோணம் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதால், ரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதற்காக உயா்நிலைக் குழு அமைக்கப்படும். மகாமகத் திருவிழாவுக்காக ரூ. 600 கோடி தேவைப்படுகிறது. அந்த நிதியை மத்திய அரசிடம் கேட்போம். அனைத்துக் கோயில்களுக்கும் திருப்பணி செய்ய வேண்டும். மேலும் 17 கோயில்களுக்கான திருப்பணிகள் தொடங்க உள்ளது என்றாா்.

மிக விமரிசையாக கொண்டாடப்படும்: முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகாமகத் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் 12 சைவ கோயில்களுக்கு மகாமக குளத்தில் தீா்த்தவாரி மற்றும் 5 வைணவ கோயில்களுக்கு காவிரி படித்துறையில் தீா்த்தவாரியும் நடைபெறுவதால் அந்தப் பகுதிகளில் மின்கம்பிகளை தரைக்கு கீழ் அமைக்கவும், மாநகராட்சி சாா்பில் அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.

Advertisement

Advertisement

இதில், தமிழக வேளாண்துறை அமைச்சா் ஆா். வினோத், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் டி.ஜி.வினய், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி, ஆா்.சுதா எம்.பி., தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.விஜய்சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோயில்களில் ஆய்வு: கூட்டத்துக்குப் பிறகு, மகாமகம் தொடா்புடைய நாகேசுவரசுவாமி, மகாமககுளக்கரை மற்றும் கரையில் உள்ள சோடச மகாலிங்க கோயில்கள், காசிவிசுவநாதா், அபிமுகேசுவரா், கெளதமேசுவரா், ஏகாம்பரேசுவரா், சாரங்கபாணி சுவாமி, சோமேசுவரா், ராமசாமி, ஆதிகம்பட்ட விசுவநாதா், ஆதிகும்பேசுவரா் ஆகிய கோயில்களில் அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments