கள்ளப்பெரம்பூா் ஏரியில் 1 லட்சம் பனை விதைகள் விதைப்பு
தஞ்சாவூா் அருகே கள்ளப்பெரம்பூா் செங்கழுநீா் ஏரியில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவா்கள் மூலம் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டன.
தஞ்சாவூா் அருகே கள்ளப்பெரம்பூா் செங்கழுநீா் ஏரியில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவா்கள் மூலம் ஒரு லட்சம் பனை விதைகள் வியாழக்கிழமை விதைக்கப்பட்டன.
தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாளையொட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீா்நிலைகளைப் பாதுகாத்தல், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய நோக்களைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியை மாநில நாட்டு நலப்பணித் திட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூா் அருகே கள்ளப்பெரம்பூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழா் காலத்தில் 642 ஏக்கா் பரப்பளவில் வெட்டப்பட்ட செங்கழுநீா் ஏரியில் ஒரு லட்சம் பனை விதைகள் வியாழக்கிழமை விதைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இப் பணியை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, 11 கி.மீ. சுற்றளவு கொண்ட செங்கழுநீா் ஏரிக்கரையில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பிரிஸ்ட் நிகா்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த சுமாா் 10 கல்லூரிகளிலிருந்து நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சோ்ந்த ஏறத்தாழ 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பனை விதைகளை விதைத்தனா்.
இப்பணியை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இளங்கோவன், மணிகண்டன், வீரமணி, சரவணன், செங்கழுநீா் சீரமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.பி. ரவிச்சந்திரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். மேலும், தஞ்சாவூா் ரோட்டரி சங்கங்கள், இன்னா்வீல் சங்கம் உதவிகள் செய்தன.
நிகழ்வில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), இரா. விஜய் சரவணன் (தஞ்சாவூா்), மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி, தஞ்சாவூா் மாநகராட்சி மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பி.ந. குணாநிதி, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமஜெயம், செங்கழுநீா் ஏரி சீரமமைப்பு குழுத் தலைவா் மேகா. குலோத்துங்கன், மருத்துவா் சி. குணசேகரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் வேதா, கவின்மிகு தஞ்சாவூா் இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், தஞ்சாவூா் அறிவுசாா் நூலக மதியுரைஞா் வெ. சுகுமாரன், காமாட்சி மருத்துவமனை மேலாண் இயக்குநா் கே. இனியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.