மணப்பாறை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது. இதனால் மதுரை- மேலூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மகாதானபுரத்திலிருந்து மதுரை மேலூருக்கு காவிரிக் கூட்டுக் குடிநீர் சுமார் 3 அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாகச் செல்லும் இந்தக் குழாயில், மதுரை சாலையில் பிள்ளையார்கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட பழுதால் உடைப்பு ஏற்பட்டு 10 அடி உயரத்திற்கு நீர் பீச்சியடித்தது. லட்சக்கணக்கான லிட்டர் நீர் வெளியேறி அருகிலிருக்கும் நிலங்களில் தேங்கத் தொடங்கியது.
இதையடுத்து அப்பகுதி கிராம மக்களே முன் வந்து, பிள்ளையார்கோவில்பட்டி குளத்திற்கு நீர் செல்லும் வகையில் அருகிலிருந்த கால்வாய்களை தூர்வாரினர். தகவலறிந்து வந்த குடிநீர் மற்றும் வடிகால் துறை அதிகாரிகள் குடிநீர் ஏற்றத்தை நிறுத்தி, பொக்லைன் மூலம் கால்வாய்களை தூர்வாரினர். நீர் முழுவதும் வடிகால் ஆன பின்னரே குழாய் உடைப்பைச் சரி செய்ய முடியும் என்றும், குழாய் பழுது நீக்கி மீண்டும் நீரேற்ற செய்ய ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை - மேலூர் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வீணான சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.