கொலையான இளைஞரின் சடலத்தை காதலி வீட்டில் வைக்க முயன்றதால் பரபரப்பு
திருச்சி அருகே கொலையான இளைஞரின் சடலத்தை, காதலியின் வீட்டில் வைக்க திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி போலீஸாரின் பேச்சைத் தொடர்ந்து கைவிடப்பட்டது .
திருச்சி அருகே கொலையான இளைஞரின் சடலத்தை, காதலியின் வீட்டில் வைக்க திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி போலீஸாரின் பேச்சைத் தொடர்ந்து கைவிடப்பட்டது .
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் அருகே கணவனூரைச் சேர்ந்த நடராஜன் மகன் விஜய் (18). பிளஸ் 2 படித்துவிட்டு திருச்சி ரயில்நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். பழூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், விஜய்க்கிடையே காதல் இருந்து வந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனை மீறி அவ்வப்போது காதலியை, விஜய் சந்தித்து வந்தார்.
இதையடுத்து, பெண்ணின் சகோதரன் விஸ்வா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் விஜய்யை கண்டித்தும், கேட்கவில்லையாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, பழூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய விஜய்யை, விஸ்வா, அவரது நண்பர்கள் வழி மறித்து கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் உயிரிழந்தார். திங்கள்கிழமை அவரது பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கொலையாளிகளை கைது செய்யும் வரை விஜய்யின் சடலத்தை காதலியின் வீட்டில் வைக்க முடிவு செய்த அவரது நண்பர்கள், உறவினர்கள் பழூருக்கு எடுத்துச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ஊர் முக்கியஸ்தர்கள் பழுர் பிரிவுசாலை அருகே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய்யின் சடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் பழூர், கணவனூரில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.