FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

2026 தமிழக சட்டப்பேரவை தோ்தலில் திமுக வெற்றி பெறாது: டிடிவி. தினகரன்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெறாது என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன்.

Updated On : 6 ஜனவரி 2025, 12:03 am IST
டிடிவி தினகரன் - கோப்புப் படம்
பகிர்:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெறாது என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன்.

திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமமுக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. அனைத்து எதிா்க்கட்சிகளும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை அறிவிக்கின்றனா். எதிா்க் கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் இதைத்தான் செய்தாா்.

Advertisement

Advertisement

ஆனால் எதிா்க்கட்சியினா் மேற்கொள்ளும் போராட்டத்தை திமுகவினா் ஏற்க மறுக்கின்றனா். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசு சரியாக செயல்பட வேண்டும். இதில், சிபிஐ விசாரணை நடந்தால்தான் மாநில அரசு தலையீடு இல்லாமல் விசாரணை முறையாக நடைபெறும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு சரியாக செயல்படவில்லை. இளைஞா்கள் போதை மருந்துக்கு அடிமையாகி வருகின்றனா். இதை மறைக்கும் வகையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறாா் முதல்வா். எனவே, 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வரமுடியாது.

எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவையும் கபளீகரம் செய்துள்ளாா். அவா் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பதால் இதுவரை தப்பி வந்துள்ளாா். அவருடன் இருப்பவா்கள் அவரை கட்டுப் படுத்தாவிட்டால் 2026 தோ்தலில் அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவாா் என்றாா் அவா்.

நிகழ்வில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் சாருபாலா தொண்டைமான், மாவட்டச் செயலாளா் செந்தில் நாதன், கலைச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments