FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கரூர் பலி: அரசுப்பணி வழங்குவதால் ஏமாற்றம், அதிருப்தியில் போட்டித் தேர்வர்கள் - டிடிவி தினகரன்

கரூர் நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது போட்டித் தேர்வர்களிடத்தில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என டிடிவி தினகரன் தெரிவித்தது பற்றி...

Updated On : 10 ஜூலை 2026, 11:43 am IST
தவெக தலைவர் விஜய் - டிடிவி தினகரன் - கோப்புப் படம்
பகிர்:

கரூர் நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது போட்டித் தேர்வர்களிடத்தில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 32 பேருக்கு முதல்வர் விஜய், இன்று அரசுப் பணி ஆணைகளை வழங்கவுள்ளார். 

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

கரூரில் தவெக தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும். முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும். இதுபோன்ற முடிவுகள், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை" என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்கள் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது.

தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும்.

மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் பிற துயரச் சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவற்றின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கும் கொள்கையை அரசு பின்பற்றுமா? இல்லையெனில், இந்தச் சம்பவத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது? என்ற நியாயமான கேள்விகளுக்கும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல; திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமையாகும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

summary

AMMK General Secretary TTV Dhinakaran stated on Friday (July 10) that providing government jobs to the families of those who lost their lives in the Karur accident would cause disappointment and dissatisfaction among aspirants preparing for competitive exams.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments