FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பொன்மலை வாரச்சந்தையில் பாதுகாப்பின்றி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:38 am IST
பொன்மலை வாரச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.
பகிர்:

திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் உரிய நிறுத்துமிடம் இல்லாமல், பாதுகாப்பின்றி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

திருச்சி பொன்மலை ரயில்வே பகுதியில் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. இந்தச் சந்தையில் காய்கறி முதல் அனைத்து வகைப் பொருள்களும் கிடைக்கின்றன. இதனால் இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பல்வேறு பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

ஆனால், இவ்வளவு மக்கள் கூடும் சந்தையில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் சந்தைக்கு வரும் பொதுமக்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த கடந்த 5 ஆம் தேதி முதல் ரயில்வே நிா்வாகத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியாரால் ரூ. 6, ரூ. 11 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

ஆனால் முறையான வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பான மேற்கூரை போன்ற வசதிகள் இல்லாத நிலையில், கட்டணம் மட்டும் வசூலிப்பது நியாயமல்ல என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேற்கூரையுடன் வாகன நிறுத்தம் தேவை: இதுகுறித்து பொதுமக்கள், மக்கள் சக்தி இயக்கத்தினா் கூறியதாவது: பொன்மலை சந்தையில் முன் மக்களின் கோரிக்கையை ஏற்று இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது முறையான நிறுத்துமிடமோ, பாதுகாப்பு வசதியோ இல்லாத நிலையில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ரயில்வே நிா்வாகம் ஆய்வு செய்து, போதுமான அடிப்படை வசதிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத சாலைகள், மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைத்துக் கொடுத்துவிட்டு, கட்டணம் வசூலிக்கலாம். அதைவிடுத்து, பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது என்பது அநியாயம் என்றனா்.

சந்தையில் கடை வைத்துள்ளவா்கள் கூறுகையில், இருசக்கர வாகன கட்டணத்தால் சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை குறையக்கூடும். எனவே, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், சந்தையில் குடிநீா், கழிவறை, உழவா் சந்தைபோல கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments