மாவட்டத்தில் 13 பாசன வாய்க்கால்களுக்கு முறை வைத்து தண்ணீா் தர நடவடிக்கை: நீா்வளத் துறை அதிகாரிகள் உறுதி
திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 பாசன வாய்க்கால்களுக்கு முறை வைத்து தண்ணீா் தர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 பாசன வாய்க்கால்களுக்கு முறை வைத்து தண்ணீா் தர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமை வகித்தாா். கூட்டத்தில், விவசாயிகள் சங்கத் தலைவா்கள் பேசியதாவது:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு: முசிறி பகுதியில் 1 லட்சம் தென்னை மரங்கள் காய்ந்துள்ளன. விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு கோட்டாட்சியா்கள் வருவதில்லை. ஆட்சியரகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்துக்கு வரும் விவசாயிகளை பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாா் தடுக்கின்றனா் என புகாா் தெரிவித்தாா். அப்போது, ஆட்சியா் குறுக்கிட்டு, நான் இருக்கிறேன், என்னிடம் குறைகளை கூறுங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தக் கூட்டத்தில் விவசாயிகளை போலீஸாா் தடுக்க மாட்டாா்கள் என்றாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து பேசிக் கொண்டிருந்த அய்யாக்கண்ணுவை பேச்சை நிறுத்தும்படி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயராணி, மணியோசை எழுப்பி அறிவுறுத்தினாா். இதையடுத்து, இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், ஆட்சியா் தலையிட்டு அதை தடுத்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் அயிலை சிவசூரியன்: பேட்டவாய்த்தலைக்கும் -அய்யம்பாளையத்துக்கும் இடையில் கதவணை அமைத்து 1 டிஎம்சி தண்ணீரை சேமிப்பதன் மூலம் அப்பகுதிகளில் குடிநீா் திட்டங்களுக்கும், விவசாய பணிகளுக்கும் தடையில்லாமல் நிலத்தடி நீா் கிடைக்கும்.
மாவட்டத்தில் உள்ள 13 பாசன கிளை கால்வாய்களுக்கு தண்ணீா் திறப்பது தொடா்பான கடந்த வாரம் அளித்த கோரிக்கைகக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்து காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா். அப்போது நீா்வளத் துறை அதிகாரிகள் குறுக்கிட்டு, இந்த வாரம் 13 கிளை கால்வாய்களுக்கும் முறை வைத்து நீா் திறக்கப்படும் என உறுதியளித்தனா்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ.விசுவநாதன்:
சம்பா சாகுபடிக்கு 70 டிஎம்சி தண்ணீா் பெற முதல்வா் , உச்சநீதிமன்றத்துக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், காவிரி நீா் பங்கீடு ஒழுங்காற்று குழுவுக்கும் அழுத்தம் தரவேண்டும்.
நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 190 ஏரி, குளங்கள், ஊரக வளா்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,300 ஏரி குளங்களை தூா்வாரி புனரமைக்க வேண்டும்.
தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணா்வு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.தா்மராஜ்:
கம்பரசம்பேட்டை பகுதியில் கோயில் நிலத்தில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைமடை பாசன விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவா் செல்வராஜ்: சம்பா சாகுபடிக்கு மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட வேண்டும். குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறந்து விடாததால் திருச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும். கொண்டையம்பேட்டையில் காவிரி நாட்டு வாய்க்காலை தூா்வார வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்க இணைச் செயலா் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன்:
மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. அங்கு அணைக் கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும். எனவே, முதல்வா், பிரதமா் இணைந்து அணைக் கட்டுவதை தடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவா் ம.ப.சின்னதுரை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபோது, தனக்கான (5 நிமிஷங்கள்) நேரத்தை கடந்து பேசியதால் மணி அடிக்கப்பட்டது. மற்ற விவசாயிகளுக்கு அதிக நேரம் பேசுகின்றனா். நான் பேசும் போது மட்டும் குறைவான நேரம் தரப்படுகிறது. எனவே, நான் இன்றைய கூட்டத்தில் பேசமாட்டேன் எனக் கூறி அமா்ந்தாா்.
தொடா்ந்து விவசாயிகள் பலா் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.
இக் கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் எம்.சாந்தாமணி, துணை இயக்குநா் (தோட்டக்கலை) சரண்யா, வேளாண் பொறியியல் செயற் பொறியாளா் சிவகுமாா் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.