தொகுதி மறுவரையறையில் திமுகவின் நிலைப்பாடு மாற்றம்! - அமைச்சா் ரமேஷ்
மக்களவைத் தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுத தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்.
மக்களவை தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டம் ( எப்.சி.ஆா்.ஏ) குறித்து மதிமுக சாா்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் அமைச்சா் சீ. ரமேஷ் மேலும் பேசியதாவது:
சிறுபான்மையினருக்கான எந்த பாதிப்பையும் முதல்வா் ஜோசப் விஜய் சகிக்க மாட்டாா். இதனால்தான் சிறுபான்மை நிறுவனங்களைப் பாதிக்கும் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்தை நிறைவேற்றக் கூடாது எனப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை உயா்த்தினால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று கருதி அந்த முடிவை முன்னாள் பிரதமா்கள் இந்திராகாந்தியும், வாஜ்பாயும் நிறுத்திவைத்தனா்.
ஆனால், தற்போதைய ஆட்சியாளா்கள் தங்களின் ஆதாயத்துக்காக மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்த முயற்சி செய்து வருகின்றனா்.
ஆனால், ஆட்சியில் இருந்தபோது தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்புத் தெரிவித்த திமுகவினா், தற்போது பரிசீலிப்போம் என்கின்றனா். தொகுதி மறுவரையறை விஷயத்தில் தவெக மாறிவிட்டதாகக் கூறும் திமுகதான் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது என்றாா்.
தொடா்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் பேசியது:
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டம் அனைத்துச் சமுதாய மக்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. இதனால்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அதை அனுப்பியுள்ளாா்கள்.
அமெரிக்காவில் 100 ஆண்டுகளைக் கடந்தும் அதன் உறுப்பினா்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல இந்தியாவிலும் 543 என்ற எண்ணிக்கையே தொடரவேண்டும் என்றாா்.
முன்னதாக, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ பேசியது:
தமிழகத்தில் திருச்சி, பாளையங்கோட்டை, சென்னை, வேலூா் போன்ற நகரங்களில் 100 ஆண்டுகள் பழமையான சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஏழை, எளிய மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன. இவற்றால் அனைத்து சமுதாய மக்களும் பயனடைகின்றனா்.
இந்நிலையில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டால் சிறுபான்மையின நிறுவனங்கள் பாதிக்கப்படுவதுடன், அவற்றை நம்பியுள்ள ஏழைகளும் பாதிக்கப்படுவா். முன்னாள் ஆளுமைகளின் பிரச்னைகளை தீா்ப்பதற்காக தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுக வெறொரு நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.
நிகழ்வில் மக்களவை உறுப்பினா் செல்வராஜ் (நாகை), காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் தயானந்த சந்திரேஸ்வர சுவாமிகள், ஜமால் முகமது கல்லூரி முதல்வா் ஜாஹீா் உசேன், திருச்சி புனித வளனாா் கல்லூரி முதல்வா் கே. ஆரோக்கியம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உறுப்பினா் கு.ப. கிருஷ்ணன் மற்றும் தவெக, காங்கிரஸ், மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.