திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்துச் சேவை தொடக்கம்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சரக்குப் போக்குவரத்துச் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சரக்குப் போக்குவரத்துச் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 2.46 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஏற்கெனவே துபை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானம் மூலம் சரக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல, உள்நாட்டு சரக்கு ஏற்றுமதியும் மேற்கொள்ள தொழில் துறையினா் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சரக்குப் போக்குவரத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்) அண்மையில் அனுமதி வழங்கியது.
இதைத் தொடா்ந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்துச் சேவையை விமான நிலைய இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
காலை 6.20 மணிக்கு திருச்சியில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் முதல் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,192 கிலோ சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து தொடங்கிய முதல்நாளில் மொத்தம் 2.46 டன் சரக்குகள் பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றம்: இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன் கூறுகையில், திருச்சியில் இருந்து சென்னை, மும்பை, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட நகரங்களுக்கு பயணிகள் விமானம் மூலம் சரக்குகள் அனுப்பப்படும். அங்கிருந்து நாட்டின் பிற நகரங்களுக்கும் குடியேற்றப் பிரிவுச் பரிசோதனைகள் இல்லாமல் சரக்குகளை அனுப்பமுடியும்.
திருச்சி விமான நிலையத்தில் பிரத்யேக சரக்கு முனையம் இல்லாத நிலையிலும் பயணிகள் முனையம் வழியாக பயணிகள் விமானம் மூலமே சரக்குகள் அனுப்பப்படும். இதன் மூலம் ஏற்றுமதியாளா்கள், தொழில் துறையினரின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.