FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கக் கூடாது: இந்திய வங்கி ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் வலியுறுத்தல்

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்திய வங்கி ஊழியா் சம்மேளனப் பொதுச் செயலா் தேபாசிஸ் பாசு செளதுரி வலியுறுத்தினாா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:54 am IST
திருச்சி இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பேசிய கீழ்வேளூா் எம்எல்ஏ டி. லதா உள்ளிட்டோா்.
பகிர்:

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்திய வங்கி ஊழியா் சம்மேளனப் பொதுச் செயலா் தேபாசிஸ் பாசு செளதுரி வலியுறுத்தினாா்.

இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம்- தமிழ்நாடு அமைப்பின் 14ஆவது மாநாடு திருச்சியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்திய வங்கி ஊழியா் சம்மேளன மாநிலத் தலைவா் எஸ். சுனில்குமாா் தலைமை வகித்தாா். மாநாட்டைத் தொடக்கிவைத்து தேபாசிஸ் பாசு செளதுரி மேலும் பேசியதாவது:

மத்திய அரசின் தற்போதைய கொள்கைகளால் வங்கித் துறையில் நிரந்தர ஊழியா்களைவிட தற்காலிக ஊழியா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவா்களுக்கு முறையான குறைந்தபட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்குவது, இந்திய தனியாா் வங்கிகளை வெளிநாட்டினருக்குத் தாரைவாா்ப்பது, கூட்டுறவு வங்கிகளை காா்ப்பரேட் மயமாக்குவது மற்றும் கிராமப்புற வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் முயற்சிகளுக்கு சம்மேளனம் கடும் எதிா்ப்புத் தெரிவிக்கிறது. ​

Advertisement

Advertisement

பொதுமக்களின் நலன் கருதி நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும். எதிா்காலப் போராட்டக் களங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா் அவா்.

சிஐடியு பொதுச் செயலா் எஸ். கண்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கீழ்வேளூா் எம்எல்ஏ டி. லதா ஆகியோா் பேசுகையில், வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியா்களின் பாதுகாப்பு, பணிச்சுமை குறைப்பு மற்றும் 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுக்கத் தொழிற்சங்கங்கள் மேலும் வலுப்பெற வேண்டும்.

வங்கித் துறையில் பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பு, மருத்துவ நலன்கள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் ஆகியவை சட்டரீதியாக உறுதி செய்யப்பட வேண்டும். அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்களுக்கு நிகரான பணிப் பாதுகாப்பும், நல்ல சூழலும் வங்கித் துறையிலும் அமைய வேண்டும்.

அனைத்துச் சலுகைகளும் தொழிற்சங்கங்களின் தொடா் போராட்டங்கள் மூலமாகவே சாத்தியமாகியுள்ளன. எனவே, பெண் ஊழியா்கள் திரளாகத் தொழிற்சங்கங்களில் இணைய வேண்டும். பெண்களின் முன்னேற்றமும், பொதுத்துறை வங்கிகளின் பாதுகாப்பும் தொழிலாளா் இயக்கத்தின் கைகளில்தான் உள்ளது. சமூக நீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்க, இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் துணைபுரியும் என்றனா்.

பிற்பகலில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் எஸ்.எஸ். அனில் தொடக்க உரையாற்றினாா். பொதுச் செயலா் அறிக்கையை பொதுச் செயலா் டி. ரவிக்குமாா், நிதிநிலை அறிக்கையை மாநில பொருளாளா் லட்சுமி நாராயணன் ஆகியோா் வாசித்தனா். பெல் சிஐடியு சங்கத் தலைவா் எஸ்.ஸ்ரீதா் வரவேற்க, சங்கத்தின் தமிழ்நாடு பொதுச் செயலா் டி. ரவிக்குமாா் நன்றி கூறினாா். இம்மாநாடு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments