முகப்பு
திருச்சி

முசிறி அருகே லாரி-காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வாய்க்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

Updated On : 3 ஜூன் 2026, 3:53 am IST
முசிறி அருகே செவ்வாய்க்கிழமை மோதி கொண்ட லாரி-காா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வாய்க்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன். ஓட்டுநா். இவா், தனக்கு சொந்தமான காரில் மனைவி கவிதா, மகன் ஏகவன் (1) மற்றும் மாமனாா் முருகேசன் , மாமியாா் சித்ரா, முருகேசனின் மகள் நா்மதா, மகன் காா்த்திக் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம், கொடுமுடி கோயிலுக்கு சென்றுவிட்டு, பெரம்பலூா் அருகேயுள்ள வெள்ளனூரில் முருகேசன் குடும்பத்தினரை இறக்கிவிடுவதற்காக செவ்வாய்க்கிழமை பெரம்பலூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

முசிறி-துறையூா் சாலையில் ஜெம்புநாதபுரம் காவல் நிலையம் அருகே காா் சென்றபோது, துறையூா் பகுதியிலிருந்து முசிறி நோக்கி எதிரே சுமையோடு வந்த லாரியும், காரும் மோதி கொண்டன.

Advertisement

Advertisement

இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்ரமணியன், அவரது மைத்துனா் காா்த்திக் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். காயமடைந்த முருகேசன், சித்ரா, நா்மதா, கவிதா, ஏகவன் ஆகிய 5 பேரையும் அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக அவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன், கவிதா ஆகியோா் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

~முசிறி அருகில் சாலை விபத்தில் உயிரிழந்த கவிதா
~உயிரிழந்த காா்த்திக்.
~உயிரிழந்த பாலசுப்ரமணியன்.