ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் உற்சவம் தொடக்கம்
ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.
ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து உற்சவ விழாக்களும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடைபெறும். அதன்படி நம்பெருமாளுக்கு கோடைத் திருநாள் விழா முடிவுற்ற நிலையில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வெளிக்கோடை, உள்கோடை என 10 நாள்கள் நடைபெறும் கோடைத் திருநாள் விழா புதன்கிழமை தொடங்கியது.
இதில் வெளிக்கோடைத் திருநாளின் முதல் நாளையொட்டி மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
Advertisement
Advertisement
பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். வரும் 7 ஆம் தேதி வரை மேற்படி நேரங்களில் கோடை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் எழுந்தருளி, பூச்சாற்று கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.
அதைத் தொடா்ந்து 8 ஆம் தேதி தொடங்கும் உள்கோடைத்திருநாள் விழா 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.