FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கோயில் திருவிழா பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடா்பான பிரச்னையில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆணையூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.ஆணையூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

மணப்பாறை அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடா்பான பிரச்னையில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வையம்பட்டி ஒன்றியம், ஆணையூரிலுள்ள குளக்கரை முனியப்பசாமி கோயிலில், ஆணையூா், கருமகவுண்டம்பட்டி, களத்துப்பட்டி, சுண்டக்காம்பட்டி ஆகிய 4 கிராமங்களை சோ்ந்த உறவுமுறையினா் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடாவெட்டி, விருந்து வைத்து ஒருநாள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

இதில், கடந்த முறை ஆணையூா் பழனிசாமி மகன் பூபதி மற்றும் சுண்டக்காம்பட்டியை சோ்ந்த முனியாண்டி மகன் சுப்பிரமணி (45) ஆகிய இருதரப்பினா் இடையே ஏற்பட்ட சா்ச்சையால் தடைபட்ட திருவிழாவை நிகழாண்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,

Advertisement

Advertisement

உறவுமுறையினா் யாருக்கும் சொல்லாமல் சுப்பிரமணி கோயிலில் திருவிழா நடத்த சகுனம் பாா்க்க முயற்சித்தாராம்.

இதையறிந்த மற்ற கிராமங்களை சோ்ந்த உறவுமுறையினா் நூற்றுக்கணக்கானோா் பூபதி தலைமையில் மணப்பாறை - கரூா் சாலையில் ஆணையூரில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசி, புதன்கிழமை வட்டாட்சியா் தலைமையில் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவும், அனைவரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியலால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

மறியல் போராட்டத்தின்போது, அப்பகுதியில் நின்றிருந்த தனியாா் குவாரிக்கு சொந்தமான டாரஸ் லாரி முகப்பு கண்ணாடி மீது அடையாளம் தெரியாத நபா் கல் எறிந்ததில், கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments