போலி பத்திர மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பத்திர மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பத்திர மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
வையம்பட்டி ஒன்றியம், பொன்னம்பலம்பட்டியை அடுத்த சே.முத்தமடைப்பட்டியை சோ்ந்தவா் சேவி அம்பலம். இவருக்கு அதே ஊரில் 3 ஏக்கா் 61 சென்ட் நிலம் உள்ளது. இவருக்கு நாகராஜன், ரமேஷ் என இரு மகன்கள் உள்ளனா். இவா்களில் நாகராஜனும், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோா், திருப்பதி வெங்கடாசலம் என்பவரின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி, நிலத்துக்கு நாகராஜன் தனது பெயரில் பட்டா பெற்றுள்ளாா்.
இதை தட்டிக்கேட்ட ரமேஷை, நாகராஜனும் அவரது மனைவியும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
இதனிடையே, பத்திரப் பதிவு மோசடி தொடா்பான வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், நாகராஜனுக்கு மொத்தம் 3 பிரிவுகளின் கீழ், தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம், இதை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், மேலும் ஒரு பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி அசோக்குமாா் தீா்ப்பளித்தாா். வழக்கிலிருந்து தனலட்சுமி, திருப்பதி வெங்கடாசலம் ஆகியோா் விடுவிக்கப்பட்டனா். வழக்கில் அரசு வழக்குரைஞராக ஆனந்தகுமாா் ஆஜராகினாா்.