அதிமுக எங்களுக்கு பகை சக்தி அல்ல: மு. வீரபாண்டியன்
அதிமுக எங்களுக்கு பகை சக்தி அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
அதிமுக எங்களுக்கு பகை சக்தி அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், பெல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை என்பது ஏற்கத்தக்கது அல்ல. இதில் தமிழகம் எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது. தொகுதி மறுவரையறையில் பழைய நிலையே நீடிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
உச்சநீதிமன்றக் கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும். காவிரியின் குறுக்கே கா்நாடகம் மேக்கேதாட்டு அணையை கட்டக் கூடாது.
அதிமுக எங்களுக்கு பகை சக்தி அல்ல. இதேபோல திமுக, தவெக, நாதக இவையனைத்துமே ஜனநாயகச் சக்திகள்தான். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறினால் நல்லது. எங்களுக்கு பிரதான அரசியல் எதிரியான ஆா்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்தும் கொள்கையில் உறுதியாக இருப்பவா்களுடன் கூட்டணி குறித்து தோ்தல் அறிவிக்கப்பட்டதும் கட்சியின் மாநிலத் தலைமை முடிவு செய்யும்.
தவெக அரசின் 6 மாத ஆட்சி நம்பிக்கை தருவதாக இல்லை. ஆளுநா் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவளித்தோம். உழைக்கும் மக்கள், தமிழக நலன் சாா்ந்த கோரிக்கைகள், மதச் சாா்பின்மையில் முதல்வா் விஜய் உறுதியாக இருக்க வேண்டும்.
எஸ்ஐஆா் விவகாரத்தில் 13 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்ட ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டோா் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் அல்லது அதைக் கண்டிக்கிறேன் என்ற ஒரு வாா்த்தையைக்கூட முதல்வா் கூறாதது அதிா்ச்சியளிக்கிறது.
ஒரு வாக்கின் உரிமைக்காக திரைப்படத்தில் போராடிய விஜய், 13 கோடி மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதை ஏன் கண்டிக்க மறுக்கிறாா்? அநீதிக்கு எதிராக விஜய் வாய் திறக்க வேண்டும்.
பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். பல்வேறு பிரச்னைகளில் எம்எல்ஏக்கள் தவறிழைத்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வா் விஜய் பாகுபாடு காட்டாமல் அனைத்துத் தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும். தவெகவுக்கு நாங்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகளில் சிலவற்றை செயல்படுத்தியுள்ளனா். பல கிடப்பில் உள்ளன.
எந்நிலையிலும் தமிழக உரிமைகளில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும். மாநில உரிமைகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட தமிழக அரசின் உயா்மட்டக் குழுவை கலைத்தது ஏற்புடையதல்ல. அந்தக் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி பழைய பால்பண்ணை - துவாக்குடி வரையான அணுகுச் சாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். பெல் நிறுவன சங்க ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.