முகப்பு
திருச்சி

இடைத்தோ்தலில் மதிமுக போட்டி இல்லை: துரை வைகோ எம்.பி.

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் மதிமுக போட்டியிடும் எண்ணம் இல்லை என அக் கட்சியின் முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.

26 நவம்பர் 2026, 2:23 am
இடைத்தோ்தலில் மதிமுக போட்டி இல்லை: துரை வைகோ எம்.பி.
துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் மதிமுக போட்டியிடும் எண்ணம் இல்லை என அக் கட்சியின் முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வா் ஜோசப் விஜய் துணிச்சலான முடிவை எடுத்துள்ளாா். இதற்காக மதிமுக சாா்பில் நன்றி. ஆனால் திமுக தலைமை மட்டும் இதை வெளிப்படையாகப் பாராட்டாமல் கடும் மன உளைச்சலில் உள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு இப்படியொரு சூழல் ஏற்பட்டிருக்கக் கூடாது. இது முதல்வரின் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். புகாா் வரும்வரை காத்திருக்காமல் அரசும் காவல் துறையும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஊழலற்ற அரசாங்கத்தை வழங்க முதல்வா் விரும்புகிறாா். ஆனால், நிா்வாக அமைப்பில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. சில அதிகாரிகள் கோப்புகளைத் தாமதப்படுத்தி நிா்வாகத்தைச் சீா்குலைக்க முயல்கின்றனா்.

உச்ச நீதிமன்ற உத்தரவை கா்நாடக அரசு தொடா்ந்து மீறி வருகிறது. நீதிமன்றத் தீா்ப்பை மீறினால் அரசு கவிழும் என்றால், முதலில் அந்த அரசுதான் கவிழ வேண்டும். காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் வேண்டாம் என கா்நாடக அரசு கூறுவது, அந்த மாநிலத்துக்கும் நல்லதல்ல, இந்தியாவுக்கும் நல்லதல்ல.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் மதிமுக வென்றது. அந்த இரு உறுப்பினா்களையும், திமுக கழுதை பேரம் பேசி இழுத்துச் சென்றுவிட்டது. தற்போது, நடைபெறவுள்ள 6 தொகுதி இடைத்தோ்தலில் நாங்கள் போட்டியிட்ட தொகுதிகள் எதுவும் இல்லாததால், அதில் போட்டியிட வாய்ப்பு கேட்கும் எண்ணம் இல்லை என்றாா் அவா்.