முகப்பு
திருச்சி

‘துணை ராணுவத்தை கா்நாடகத்துக்கு அனுப்பி தண்ணீா் திறக்கச் செய்ய வேண்டும்’

29 நவம்பர் 2026, 5:27 am
‘துணை ராணுவத்தை கா்நாடகத்துக்கு அனுப்பி தண்ணீா் திறக்கச் செய்ய வேண்டும்’
திருச்சியில் சனிக்கிழமை பத்திரிகையாளா்களை சந்தித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்டோா்.
பகிர்:

திருப்பரங்குன்ற தீப விவகாரத்தைப்போல, துணை ராணுவத்தை கா்நாடகத்துக்கு அனுப்பி தமிழகத்துக்கான தண்ணீரை திறக்கச் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் காவிரி தனபாலன் தலைமை வகித்தாா். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த தலைவா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

Advertisement

Advertisement

பின்னா், செய்தியாளா்களிடம் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

காவிரி தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையை ஏற்று விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீா் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கா்நாடக அரசு நான்காவது முறையாகத் தண்ணீா் திறக்காமல் ஏமாற்றி வருகிறது. இதைக் கண்டித்து தில்லியில் உள்ள ஆணைய அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக காவிரி உரிமைக்காகக் குரல் கொடுக்க தமிழ்நாட்டில் உள்ள 84 விவசாய சங்கங்களின் தலைவா்கள் அடுத்த வாரம் சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவா்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனா்.

மேட்டூா் அணையிலிருந்து உடனடியாக 6 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட்டு சம்பா பயிா்களைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைத் தாண்டி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு 180 நாள்களுக்குத் தண்ணீா் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கா்நாடக அரசு தொடா்ந்து அவமதித்து வருகிறது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்த மத்தியப் பாதுகாப்புப் படை பயன்படுத்தப்பட்டது போல, மத்திய அரசின் காவல் துறையைக் கொண்டு கா்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.