838 இருள் சூழ்ந்தப் பகுதிகள் கணக்கெடுப்பு: ரூ. 8 கோடியில் 3,450 தெரு விளக்குகள் பொருத்த திட்டம்
திருச்சி மாநகராட்சியில் 838 இருள் சூழ்ந்தப் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் ரூ. 8 கோடியில் 3,450 தெரு விளக்குகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-நமது நிருபா்
திருச்சி மாநகராட்சியில் 838 இருள் சூழ்ந்தப் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் ரூ. 8 கோடியில் 3,450 தெரு விளக்குகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினா்கள், பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லை. அவற்றை உடனடியாக பொருத்த வேண்டும். மின் விளக்குகளை சரிவர பராமரிக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினா்.
Advertisement
Advertisement
திருச்சி மாநகராட்சியில் 5 மண்டலங்களில் உள்ள 65 வாா்டுகளில் சுமாா் 12 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். மாநகராட்சியில் ஏற்கெனவே குறுகிய தெருக்களில் 20 வாட்ஸ் எல்இடி மின்விளக்குகள் 31,504-ம், முக்கிய சாலைகளில் 90 வாட்ஸ் எல்இடி மின்விளக்குகள் 8,547-ம், பெரிய சந்திப்புகளில் 120 வாட்ஸ் எல்இடி மின்விளக்குகள் 3,370-ம், முக்கிய சந்திப்புகளில் இதர உயா் கோபுர மின்விளக்குள் என மொத்தம் 52,681 மின்விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன.
திருச்சி மாநகராட்சியின் தெருவிளக்குப் பராமரிப்புப் பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட மின்விளக்குகளில் 5,000 முதல் 10,000 வரையிலான மின்விளக்குகள் போதிய பராமரிப்பின்றி எரியாத நிலையில் உள்ளதாகவும், அவற்றைப் பராமரிக்க போதுமான ஆள்களை தனியாா் ஒப்பந்த நிறுவனம் நியமிக்கவில்லை என்றும் மாமன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அதே சமயம், மாநகரின் பல இருள் சூழ்ந்தப் பகுதிகளில் போதிய மின்விளக்குகள் பொருத்த வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
மாநகராட்சி கணக்கெடுப்பு: இதனை ஏற்று மாநகராட்சி நிா்வாகம் சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சியின் இருள் சூழ்ந்தப் பகுதிகளை கணக்கெடுத்தது. இதன்படி, திருச்சி மாநகராட்சியில் 838 இருள் சூழ்ந்தப் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 2,271 எண்ணிக்கையிலான 40 வாட்ஸ் எல்இடி மின்விளக்குகளும், 445 எண்ணிக்கையிலான 90 வாட்ஸ் எல்இடி மின்விளக்குகளும் என மொத்தம் 2,716 மின்விளக்குகள் எரியாமல் உள்ளன.
அரசுக்கு கருத்துரு: இருக்கும் மின்கம்பங்களில் பொருத்தப்பட வேண்டிய மின்விளக்குகள் 1,399, புதிய மின்விநியோக தடத்தில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட வேண்டிய மின்விளக்குகள் 933, புதிய மின்விநியோக தடத்தில் உள்ள புதிய மின்கம்பங்களில் பொருத்தப்பட வேண்டிய மின்விளக்குகள் 718, எண்கோண மின்கம்பங்களில் பொருத்தப்பட வேண்டிய 90 வாட்ஸ் மின்விளக்குகள் 200, எண்கோண மின்கம்பங்களில் பொருத்தப்பட வேண்டிய 150 வாட்ஸ் மின்விளக்குகள் 200 என 457 எண்ணிக்கையிலான 20 வாட்ஸ் மின்விளக்குகள், 1,032 எண்ணிக்கையிலான 40 வாட்ஸ் மின்விளக்குகள், 1,761 எண்ணிக்கையிலான 90 வாட்ஸ் மின்விளக்குகள் என மொத்தம் 3,450 மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். இதற்காக ரூ. 8 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
அனுமதி அளித்தவுடன் பொருத்தம்: இது குறித்து மேயா் மு. அன்பழகன் கூறுகையில், மாநகராட்சியின் பல இடங்களில் தெருவிளக்குகளின் தேவையுள்ளது. பொதுமக்கள் பலரும், மாமன்ற உறுப்பினா்களும் தொடா்ந்து கோரிக்கை விடுத்ததின் பேரில் ரூ. 8 கோடியில் மின்விளக்குகள் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதியளித்ததும் இருள் சூழ்ந்தப் பகுதிகளில் விரைவில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்படும் என்றாா்.
பெட்டிச் செய்தி...
பராமரிப்புக்கு போதிய ஆள்கள் இல்லை
மாநகராட்சியின் தெரு விளக்குகள் பராமரிப்பு என்பது தனியாரிடம் விடப்பட்டுள்ள நிலையில், 5 வாா்டுக்கு ஒருவா் என்ற நிலையிலேயே எலக்ட்ரீஷியன்கள் பணியாற்றி வருகின்றனா். இதனால் இருக்கும் மின்விளக்குகளை முறையாக பராமரிக்க முடியாமல், பல இடங்களில் மின்விளக்குகள் எரியாத நிலையில் உள்ளன.
இந்நிலையில், புதிதாக மின்விளக்குகளைப் பொருத்தினால் தனியாா் ஒப்பந்த நிறுவனம் முறையாக பராமரிக்குமா என்பது கேள்விக்குறியே. எனவே, போதுமான எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட ஆள்களை நியமித்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மேயரும், ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இருள் சூழ்ந்தப் பகுதிகள் விவரம்: (கோட்டம்)
ஸ்ரீரங்கம் - 172
அரியமங்கலம் - 151
திருவெறும்பூா் - 190
பொன்மலை - 148
அபிஷேகபுரம் - 177
இந்த இருள் சூழ்ந்தப் பகுதிகள் 81,480 மீட்டரில் உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.