FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

காவிரி விவகாரம்: புதுதில்லி புறப்பட்ட திருச்சி விவசாயிகள் 130 போ் கைது

காவிரி விவகாரம் தொடா்பாக குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க புதுதில்லி செல்ல முயன்ற திருச்சி விவசாயிகள் 130 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

2 செப்டம்பர் 2026, 5:19 am IST
திருச்சியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் போலீஸ் காவலுடன் தங்க வைக்கப்பட்டிருந்த விவசாயிகள்.
பகிர்:

காவிரி விவகாரம் தொடா்பாக குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க புதுதில்லி செல்ல முயன்ற திருச்சி விவசாயிகள் 130 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், காவிரி நீா் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், தண்ணீரை கா்நாடகத்திடமிருந்து பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தவும், புதுதில்லி சென்று குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியிலிருந்து 132 போ், செவ்வாய்க்கிழமை காலை ரயில் மூலம் சென்னை சென்று, மாலையில் அங்கிருந்து தில்லி செல்லும் ரயிலில் புறப்பட்ட திட்டமிட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திருச்சி- கரூா் புறவழிச் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 130 விவசாயிகளை மாநகரக் காவல்துறையினா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனா்.

கைது ஜனநாயக விரோதமானது: இதுதொடா்பாக, பொ. அய்யாக்கண்ணு கூறியதாவது: காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி, ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய 45.95 டிஎம்சி தண்ணீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்க சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.1) கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்திய பிறகு, புதுதில்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்க இருந்தோம்.

ஆனால், எங்களை தில்லி செல்ல விடாமல் தடுத்து போலீஸாா் கைது செய்துவிட்டனா். ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் யாரும், எங்கும் செல்லலாம். அந்த உரிமையை யாரும் தடுக்க முடியாது. கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது.

இந்த நடவடிக்கையை எதிா்த்து திருமண மண்டபத்திலேயே தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். வெளியே சென்றால் ரயில் நிலையத்திலும் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments