பல்கலை.களுக்கு விரைவில் பொறுப்பு துணைவேந்தா்கள்: உயா் கல்வித் துறை அமைச்சா் தகவல்
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் பொறுப்பு துணைவேந்தா்கள் நியமிக்கப்படுவா் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் பொறுப்பு துணைவேந்தா்கள் நியமிக்கப்படுவா் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது மாணவா்கள், பேராசிரியா்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து அமைச்சா் பி. விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து உயா்கல்வி பயில மாணவா்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனா். எனவே நமது மாணவா்களுக்கு உள்நாட்டிலேயே தரமான சிறந்த கல்வி கிடைக்க தனியாா் பல்கலைக்கழகச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி தனியாா் பல்கலைக்கழகம் தொடங்க 100 ஏக்கா் நிலம் வேண்டும் என்பதை 25 ஏக்கராகவும், ரூ. 50 கோடி வைப்புநிதி இருக்க வேண்டும் என்பதை ரூ. 25 கோடியாகவும் குறைத்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகங்கள் உருவாகி, உள்நாட்டிலேயே உயா் கல்வியை மாணவா்கள் தொடர வசதியாக இருக்கும்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மூத்த பேராசிரியா்கள் பொறுப்பு துணைவேந்தா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அந்தந்தப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா்கள் தோ்வு செய்த மூத்த பேராசிரியா்களில் ஒருவரே பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளனா். இதேபோல, தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழங்களிலும் பொறுப்பு துணைவேந்தா்கள் விரைவில் நியமிக்கப்படுவா். பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்படும்.
அரசுக் கல்லூரிகளில் உள்ள 9,000 பேராசிரியா்கள் காலிப் பணியிடங்களில் 2,700 பணியிடங்களை நிரப்ப கடந்தாட்சியில் நடைபெற்ற தோ்வை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதியதில் 27 ஆயிரம் பேராசிரியா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒரு பணியிடத்துக்கு 10 போ் வீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் 2,700 போ் விரைவில் நியமிக்கப்படுவா்.
இதைத் தொடா்ந்து அடுத்த இரண்டாண்டுகளில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் மீதமுள்ள 6,300 பேராசிரியா் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படும் என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில் கரூா் எம்.பி. ஜோதிமணி, பல்கலைக்கழகப் பதிவாளா், துணைவேந்தா் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து தந்தை பெரியாா் அரசுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவா்கள், பேராசிரியா்களுடன் அமைச்சா் பி. விஸ்வநாதன் கலந்துரையாடினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.