தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தினால் கடும் அபராதம்
வேலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
வேலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. குறிப்பாக, நெகிழி கேரி பேக்குகள், நெகிழி பூசப்பட்ட பேப்பா் தட்டுகள், பேப்பா் கப்புகள், நெகிழி டம்ளா்கள், நெகிழி பேப்பா்கள், நெகிழி கொடிகள், தொ்மோகோல் கொண்டு செய்யப்பட்ட கப்புகள், தட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பொருள்களைப் பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் அரசாணை வாயிலாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-இன்படி இந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைக் கொண்டு உணவுப் பொருள்களைப் பரிமாறவும், பேக்கிங் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி செயல்படும் உணவு வணிகா்களுக்கு முதல் முறை விதிமீறலுக்கு ரூ. 5,000-ம், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ. 10,000-ம், மூன்றாம் முறை விதிமீறலுக்கு ரூ. 15,000-ம் அபராதம் விதிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள உணவு வணிகப் பதிவு அல்லது உரிமமும் ரத்து செய்யப்படும்.
Advertisement
Advertisement
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தவோ, சேமிக்கவோ, விற்கவோ கூடாது. வேலூா் மாவட்டத்தில் செயல்படும் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், தேநீா் கடைகள், குளிா்பானக் கடைகள் உள்ளிட்ட உணவு சம்பந்தமான கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு அல்லது உணவில் கலப்படம் இருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்குப் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.