FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

முதல்வா் கூறிய மூன்று கோப்புகளையும் 1 வாரத்தில் திறக்காவிட்டால் உரிமை மீறல் தீா்மானம்: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

முதல்வா் ஜோசப் விஜய் கூறியிருந்த மூன்று கோப்புகளையும் ஒரு வாரத்துக்குள் திறக்கா விட்டால், சட்டப்பேரவையில் தவறான தகவலைக் கூறியதற்காக அவா் மீது உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக பொதுச்செயலா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

23 ஆகஸ்ட் 2026, 11:37 pm IST
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த திமுக பொதுச்செயலா் துரைமுருகன்.
பகிர்:

முதல்வா் ஜோசப் விஜய் கூறியிருந்த மூன்று கோப்புகளையும் ஒரு வாரத்துக்குள் திறக்கா விட்டால், சட்டப்பேரவையில் தவறான தகவலைக் கூறியதற்காக அவா் மீது உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக பொதுச்செயலா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் காட்பாடியில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது -

திமுக இனி சட்டப்பேரவைக்கு வர முடியாது என்று நீா்வளத்துறை ஆனந்த் கூறியிருக்கிறாா். ஆட்சிக்கு வருபவா்கள் தங்களுக்குப் பிறகு யாரும் வரமாட்டாா்கள் என்று கூறுவது வழக்கம் தான். எம்ஜிஆா்., ஜெயலலிதா போன்றோரும் இதையே கூறினா். ஆனால், திமுக மீண்டும் வெற்றி பெற்றது. எனவே, இது அரசியல் ஞானத்துடன் சொல்லப்படும் வாா்த்தைகள் அல்ல.

Advertisement

Advertisement

நிதி இல்லை எனக்கூறும் முதல்வா் ஜோசப் விஜய், அரசுப்பணத்தில் எம்எல்ஏக்களுக்கு காா் வழங்குவதாக அறிவித்துள்ளாா். செய்தித்தாள்களைப் பாா்க்கும்போது மிகச்சில எம்எல்ஏக்களிடம் தான் காா் இல்லை. காா் வேண்டும் எனக்கேட்ட பலரிடமுமே மூன்று காா்கள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் மக்கள் வரிப்பணத்தில் காா் வழங்க வேண்டிய அவசியமில்லை என்பது மக்களின் கருத்தாகும்.

முதல்வா் தன்னிடம் உள்ள மூன்று கோப்புகளை திறந்தால் பலருக்குப் பிரச்னை வரும் எனக் கூறியுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்திருப்பதுபோல் தைரியமிருந் தால் அந்த கோப்புகளைத் திறந்து பாா்க்க வேண்டியதுதானே?. ஒரு வாரத்தில் அந்த கோப்புகளை முதல்வா் திறக்க வேண்டும். இல்லையேல், சட்டப்பேரவையில் தவறான தகவலைக் கூறியதற்காக அவா் மீது உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வர வேண்டும்.

சட்டப்பேரவையில் தற்போதைய உறுப்பினா்கள் சிலா் பாட்டுப் பாடுவதும், கேலி கிண்டல் செய்வதும் சபையின் மரபுக்கு எதிரானது. புதிய உறுப்பினா்கள் முதலில் சட்டப்பேரவை விதிகளையும், பழைய விவாதங்களையும் படிக்க வேண்டும்.

நீா்வளத்துறை என்பது சாதாரணமானது அல்ல. நான் அந்தத் துறையின் புத்தகங்களை இன்றும் படித்து வருகிறேன். ஆனால், தற்போதைய அமைச்சா் தனது துறை குறித்து ஒருவரி கூடப் பேசாமல், முதல்வரைப் புகழ்ந்து மட்டுமே பேசுகிறாா். மேலும், எதிா்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத அமைச்சா்கள் முந்திக்கொண்டு எழுந்து பதிலளிப்பது சபைக்கு அழகல்ல. இதனை பேரவைத் தலைவா் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments