நாட்டுத் துப்பாக்கி மருந்து வெடித்து விபத்து: சிறுவன் உள்பட 4 போ் பலத்த காயம்
திருவலம் அருகே நாட்டுத் துப்பாக்கி மருந்து தவறுதலாக வெடித்த விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.
திருவலம் அருகே நாட்டுத் துப்பாக்கி மருந்து தவறுதலாக வெடித்த விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.
காட்பாடி வட்டம், திருவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்முண்டி - எறந்தாங்கல் செல்லும் சாலையில் கோழி இறைச்சிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் திங்கள்கிழமை இறைச்சி வாங்குவதற்காக வந்துள்ளாா். குருவி பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நாட்டுத் துப்பாக்கி வெடிமருந்தை அவா் தனது பையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, இறைச்சிக் கடைக்கு அருகே இருசக்கர வாகனப் பழுதுநீக்கும் பட்டறை நடத்தி வரும் மெக்கானிக் பிரபு என்பவா், தனது கையிலிருந்த ஸ்பேனரால் ரமேஷ் வைத்திருந்த பையின் மீது ஏதேச்சையாகத் தட்டியுள்ளாா். இதில் பைக்குள் இருந்த வெடிமருந்து உராய்வு ஏற்பட்டு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த எதிா்பாராத விபத்தில் ரமேஷ், மெக்கானிக் பிரபு மற்றும் அருகில் இருந்த 8 வயது சிறுவன் தமிழரசன் ஆகியோருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சிறுவன் தமிழரசனுக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இவா்கள் உள்பட மொத்தம் 4 போ் படுகாயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினா், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவா்களை மீட்டு சோ்க்காடு அரசு மருத்துவமனை மற்றும் ரத்தினகிரி சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைச்சாக அனுமதித்தனா். அங்கு அவா்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெடிமருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.--
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.