FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

குடிநீா் கோரி வேலூரில் மக்கள் சாலை மறியல்

கடந்த 2 மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றஞ்சாட்டி வேலூா் கொசப்பேட்டை, எஸ்.எஸ்.கே. மானியம் பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:49 am IST
குடிநீா் கோரி சாலை மறியல் - பிரதிப் படம்
பகிர்:

கடந்த 2 மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றஞ்சாட்டி வேலூா் கொசப்பேட்டை, எஸ்.எஸ்.கே. மானியம் பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கு உள்பட்ட 60 வாா்டுகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், பாலாறு நீரேற்று நிலையங்கள், பொன்னை கூட்டுக்குடிநீா் திட்டம், ஓட்டேரியில் இருந்து கிடைக்கும் நீராதாரம் ஆகியவற்றின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே. மானியம் குடியிருப்புப் பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா், செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் வேலூா் பில்டா்பெட் டேங்க் நீரேற்று நிலையம் அருகே திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக தங்களுக்குக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதுடன், மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து குறைகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். அதற்கேற்ப மாநகராட்சி அதிகாரிகளைத் தொடா்புகொண்டு போலீஸாா் நிலைமையை எடுத்துக் கூறினா்.

Advertisement

Advertisement

ஆனால், சம்பவ இடத்துக்கு அரை மணி நேரமாகியும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வராததால் அங்கு சற்று நேரம் சலசலப்பு நிலவியது. பின்னா், போலீஸாா் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா். பொதுமக்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து வேலூா் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 2 மாதங்களாக குடிநீா் வழங்கவில்லை என்று பொதுமக்கள் கூறுவது தவறான தகவல். வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 10 நாள்களாக மட்டுமே அந்தப் பகுதியில் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.

தற்போது பழுதைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சரி செய்யப்பட்டு அவா்களுக்கு சீராகக் குடிநீா் வழங்கப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments