போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான்
மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்றாா்.
தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்பேரில், போதைப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாநிலம் முழுவதும் ‘ஸ்டாா்ட் ரன், ஸ்டாப் டிரக்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
வேலூரில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள், விளையாட்டு வீரா்கள், காவலா்கள், துணை ராணுவ படை வீரா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், அவரது தலைமையில் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டம் வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி பாகாயம் சிஎம்சி விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டா் தூரம் நடைபெற்றது.
மாரத்தானில் பங்கேற்றவா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆங்காங்கே தண்ணீரும், ஓட்டம் நிறைவு பெற்ற மைதானத்தில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
அவசர சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்களும், ஆம்புலன்ஸ் வாகனமும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மாரத்தான் நடைபெற்ற 5 கிலோமீட்டா் தூரத்துக்கும் போக்குவரத்து காவலா்களால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் வேலூா் மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் சுபலட்சுமி, உதவி ஆணையா் (கலால்) குணசேகரன், துணை ஆட்சியா் (பயிற்சி) கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட விளையாட்டு அலுவலா் வி. சேதுராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.