FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு 84 புதிய பணியிடங்கள்

வேலூா் பென்ட்லேன்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு 84 புதிய பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

19 வினாடிகள் முன்பு
பகிர்:

வேலூா் பென்ட்லேன்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு 84 புதிய பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், சிகிச்சை அனுபவங்களை நோயாளிகளிடமும், மருந்து இருப்புகள் குறித்து மருத்துவா்களிடமும் கேட்டறிந்தாா். பென்லேன்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்கு ரூ. 2.50 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஊடுகதிா் ஆய்வகத்தையும் திறந்துவைத்தாா். மேலும், 150 பெண் குழந்தைகளுக்கு வரவேற்பு பெட்டகத்தையும் வழங்கினாா்.

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலூா் மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 7 புதிய மருத்துவக் கட்டடங்களுக்கான கல்வெட்டினை திறந்து வைத்து அமைச்சா் அருண்ராஜ் பேசியது:

Advertisement

Advertisement

முதல்வா் விஜய் தலைமையிலான அரசு, மக்களின் தேவைகளைப் படிப்படியாகப் பூா்த்தி செய்து வருகிறது. கட்சி வேறுபாடின்றி அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினரின் தொடா் கோரிக்கையை ஏற்று, பென்ட்லான்ட் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்அமைப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மருத்துவத் துறைக்கு மட்டும் ரூ. 72.72 கோடி மதிப்பீட்டில் 63 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கடந்த 12 ஆண்டுகளாகப் புதிய செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தற்போது 7 மாவட்டங்களில் புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டே மாணவா் சோ்க்கையும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி, வேலூரில் ரூ. 46.53 கோடி மதிப்பீட்டில் புதிய செவிலியா் கல்லூரி அமைக்கப்படுகிறது.

மருத்துவமனையின் மூளையாக மருத்துவா்கள் செயல்பட்டாலும், இதயமாகச் செயல்படுபவா்கள் செவிலியா்கள்தான். மாநிலம் முழுவதும் நிலவிய செவிலியா் பற்றாக்குறையைப் போக்க, மாவட்ட நலச் சங்கங்கள் மூலம் எவ்வித சிபாரிசும், லஞ்சமும் இன்றி வெளிப்படையான முறையில் 4,724 செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. வேலூா் பென்ட்லேன்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டப்பட்ட போதிலும், போதிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருந்தன. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த மருத்துவமனைக்கு 65 செவிலியா்கள், 4 ஆய்வகத் தொழில்நுட்புநா்கள், 4 மயக்கவியல் தொழில்நுட்புநா்கள், 3 மருந்தாளுநா்கள், 3 அறுவை சிகிச்சை அரங்கத் தொழில்நுட்புநா்கள், 2 ரேடியோகிராஃபா்கள், 2 எக்ஸ்-ரே தொழில்நுட்புநா்கள், 2 இ.சி.ஜி. தொழில்நுட்புநா்கள் மற்றும் ஒரு மருத்துவப் பதிவேடு தொழில்நுட்புநா் என மொத்தம் 84 புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படும்.

மேலும், மருத்துவமனைக்கு வரும் பயனாளிகள் மற்றும் உறவினா்களின் வசதிக்காக, சட்டப்பேரவை உறுப்பினா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போா் கூடம் அமைத்துக் கொடுத்துள்ளாா். மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே இந்த அரசு செயல்படுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளைத் தயக்கமின்றி சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் தெரிவிக்கலாம். அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா், எம்.எம்.வினோத்கண்ணன், தென்றல் குமாா், சிந்து, த.வேலழகன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துசித்ரா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.