வீட்டு வசதி வாரிய நிலத்தை விடுவிக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்
வேலூரில் வீட்டு வசதி வாரியத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் தங்களது வசம் ஒப்படைக்கக் கோரி, பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூரில் வீட்டு வசதி வாரியத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் தங்களது வசம் ஒப்படைக்கக் கோரி, பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம், 24-ஆவது வாா்டுக்கு உட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்காக 485 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் அரசு சாா்பில் எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பெரும்பாலான நிலங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், 23 ஏக்கா் நிலம் மட்டும் தற்போது வரை விடுவிக்கப்படாமல் உள்ளது.
விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தங்களது நிலத்தை விடுவித்து தங்களிடமே ஒப்படைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து போராடி வருகின்றனா். இது தொடா்பாக அமைச்சா், ஆட்சியா் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய தீா்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தங்கள் கோரிக்கையைத் தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பந்தல் அமைத்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்துத் தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது பொதுமக்கள், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விடுவிக்கக் கோரி 45 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். எங்களது நிலத்தை எங்களிடம் ஒப்படைக்கும் வரை தொடா்ந்து இப்போராட்டம் நீடிக்கும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.