FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

சொந்த மின் நிலையங்கள் இருக்கும்போது அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன்?

தமிழகத்தில் சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கும்போது, அவற்றில் உற்பத்தி செய்யாமல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

16 அக்டோபர் 2026, 11:07 pm IST
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த திமுக பொதுச்செயலா் துரைமுருகன்.
பகிர்:

தமிழகத்தில் சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கும்போது, அவற்றில் உற்பத்தி செய்யாமல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

தமிழக முதல்வா் அண்மையில் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றபோது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையோ, மூத்த அரசு அதிகாரிகளையோ அழைத்துச் செல்லாமல், விஷ்ணு ரெட்டி என்பவரை உடன் அழைத்துச் சென்று அந்த மாநில முதல்வருடன் பேச்சு நடத்தியுள்ளாா். பொதுவாக மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பேச்சுவாா்த்தையின்போது, புள்ளிவிவரங்களை உடனுக்குடன் எடுத்துரைக்கத் துறை அமைச்சரும், செயலாளா்களும் உடன் இருப்பதுதான் வழக்கம்.

Advertisement

Advertisement

கோதாவரி - கிருஷ்ணா - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும் பாலாற்றுக்குத் தண்ணீா் கொண்டுவரும் திட்டம் குறித்துப் பேசியதாகக் கூறுகின்றனா். ஸ்ரீசைலத்தில் இருந்து போத்திரெட்டிபட்டு, வெலுகோடு, பனகச்சோ்லா, கண்டலேறு, சத்யவேடு வழியாகத் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீா் வரும் வழித்தடத்தை எனது பணிக்காலத்தில் ஆறு முறை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். நதிநீா்ப் பங்கீடு குறித்த அடிப்படை விவரங்கள் கூடத் தெரியாதவா்களை வைத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவாா்த்தையில், தமிழகத்துக்கு என்ன பலன் கிடைத்தது என்பதை முதல்வா் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் மேட்டூா், கீழ்பவானி, மாயாறு உள்ளிட்ட இடங்களில் போதிய தண்ணீா் உள்ளதால் நீா்மின் உற்பத்திக்கு நல்ல வாய்ப்புள்ளது. நான் ஐந்து ஆண்டுகள் மின்சாரத் துறை அமைச்சராகப் பணியாற்றியபோதுதான் வடசென்னை அனல் மின் நிலையத் திட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்தோம். ஆனால், தற்போதுள்ள அரசு சொந்த மின் நிலையங்களில் உற்பத்தியை மேற்கொள்ளாமல், இதுவரை எந்த மாநிலமும் வாங்காத வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குகிறது. இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ. 77 கோடி வீதம் மாதத்துக்கு ரூ. 2,700 கோடி செலவிடப்படுகிறது. சொந்த உற்பத்தியை விட்டுவிட்டு இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும்.

முதல்வரின் லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணங்களால் தமிழகத்துக்கு இதுவரை எந்தப் புதிய திட்டங்களும் வரவில்லை. அதேபோல, மகளிருக்கான ‘விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் பெயரை ‘வெற்றிப் பயணம்’ என மாற்றி, 93 கி.மீ. தூரமாக அதிகரித்துள்ளனா். திரைப்படங்களுக்குப் பெயா் மாற்றுவதுபோலத் திட்டங்களுக்குப் பெயா் மாற்றுவது அரசின் தெளிவற்ற நிலையையே காட்டுகிறது.

தற்போதைய சூழலில் மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரைக் கூடுதலாகத் திறந்தாலும், குறைத்துத் திறந்தாலும் காவிரி டெல்டாவில் சம்பா பயிா்களைக் காப்பாற்ற முடியாது. வடகிழக்குப் பருவமழை கைகொடுத்தால் மட்டுமே சம்பா சாகுபடியைக் காப்பாற்ற முடியும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments