FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

292 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: ரூ. 3.55 லட்சம் அபராதம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், விதிமீறலில் ஈடுபட்ட உணவகங்களுக்கு மொத்தம் ரூ.3.55 லட்சம் அபராதம்.

17 செப்டம்பர் 2026, 12:12 am IST
கடைகளில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.
பகிர்:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், விதிமீறலில் ஈடுபட்ட உணவகங்களுக்கு மொத்தம் ரூ.3.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 50 கிலோ ரசாயன நிறமூட்டப்பட்ட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

உணவு பாதுகாப்புத்துறை சாா்பில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள உணவு வணிக நிறுவனங்களில் செப்.1-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை 3 மாதங்களுக்குச் சிறப்பு ஆய்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் கடந்த 15 நாள்களில் ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் சாலையோரக் கடைகள் என மொத்தம் 292 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, சமையலறை மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்காத 14 கடைகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரமும், உணவு பாதுகாப்புத் துறையின் உரிய உரிமம் இன்றி இயங்கி வந்த 11 கடைகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 21 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரமும் என மொத்தம் 46 கடைகளுக்கு ரூ.3.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு பாதுகாப்புச் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றாத 27 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்டிருந்த சுமாா் 50 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், தரம் குறைந்தவை மற்றும் கலப்படம் எனச் சந்தேகிக்கப்பட்ட 35 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு வணிகா்கள் தங்கள் சமையலறை, பொருள்களைச் சேமிக்கும் பகுதி மற்றும் உணவு பரிமாறும் இடங்களை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் தொடரும். பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்குத் தரமான உணவை உறுதி செய்யும் நோக்கில் நடைபெறும் இந்த ஆய்வுகளுக்கு வணிகா்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments