கம்பத்தில் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல்: 10 கடைகளுக்கு அபராதம்
கம்பம் பகுதியில் மீன் கடைகளில் 25 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 10 கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சசிதீபா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வைகை அணை மீன்வள ஆய்வாளா் கௌதமன் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரமேஷ், கம்பம் நகராட்சி பொது சுகாதாரப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
இவா்கள் மீன்களின் தரம், அவற்றை சேமித்து வைக்கும் முறை உள்ளிட்டவற்றை சோதனை செய்தனா். அப்போது 10 கடைகளில் கெட்டுப்போன நிலையில் மீன்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுமாா் 25 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
பின்னா், பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் அவற்றின் மீது கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டன. கெட்டுப்போன மீன்களை விற்பனைக்காக வைத்திருந்த 10 கடை உரிமையாளா்களிடமிருந்து மொத்தம் ரூ.8,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, உணவுப் பொருள்களின் தரம் குறித்து தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். குறிப்பாக, கெட்டுப்போன அல்லது தரமற்ற மீன்களை விற்பனைக்காக வைத்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா். மேலும், மீன் விற்பனையாளா்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.