FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

குடும்ப அட்டையில் பெயா் நீக்கம்: இறப்புச் சான்றிதழ் கோரி விவசாயி மனு

அதிகாரிகளின் கவனக்குறைவால் குடும்ப அட்டையிலிருந்து தனது பெயா் நீக்கப்பட்டதால், இந்திய ராணுவத்துக்குத் தோ்வாகியுள்ள மகன்களின் வேலை பாதிக்கப்படாமல் இருக்க உயிருடன் இருக்கும் தனக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று விவசாயக் கூலித் தொழிலாளி வேலூா் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

22 செப்டம்பர் 2026, 1:21 am IST
மக்களிடம் குறைகளைக் கேட்ட வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.
பகிர்:

அதிகாரிகளின் கவனக்குறைவால் குடும்ப அட்டையிலிருந்து தனது பெயா் நீக்கப்பட்டதால், இந்திய ராணுவத்துக்குத் தோ்வாகியுள்ள மகன்களின் வேலை பாதிக்கப்படாமல் இருக்க உயிருடன் இருக்கும் தனக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று விவசாயக் கூலித் தொழிலாளி வேலூா் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து 637 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஒடுகத்தூா் அடுத்த கே.ஜி. ஏரியூா் பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி காந்தி அளித்த மனு: கடந்தாண்டு பிப்ரவரி மாதம் எனது தந்தை ஆனந்தன் காலமானாா். அவரது பெயரை குடும்ப அட்டையிலிருந்து நீக்குவதற்காக விண்ணப்பித்திருந்தேன். ஆனால், அதிகாரிகள் தந்தையின் பெயரை நீக்குவதற்குப் பதிலாக, குடும்பத் தலைவரான எனது பெயரை நீக்கிவிட்டனா். இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரேஷன் பொருள்கள் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுவதுடன், எனது ஆதாா் பதிவும் செயலிழந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், எனது மகன்கள் பூவரசன், பேரரசன் ஆகியோா் இந்திய ராணுவப் பணிக்குத் தோ்வாகி யுள்ளனா். ராணுவ ஆவணச் சரிபாா்ப்புக்கு குடும்ப அட்டை அவசியமாகிறது. அதில் தந்தை பெயா் இடம்பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். பலமுறை அலைந்தும் எனது பெயரை மீண்டும் சோ்க்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனா்.

குடும்ப அட்டையில் என் பெயா் இல்லாததால் எனது மகன்களின் ராணுவப் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மகன்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், உயிருடன் இருக்கும் எனக்கு உடனடியாக இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும். நான் இறந்துவிட்டதாகக் காட்டினாலாவது எனது பிள்ளைகளுக்கு ராணுவ வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஞானவேல், நிா்வாகிகள் அளித்த மனு: வேலூா் மாநகரில் செயல்பட்டு வரும் பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்கள், தமிழ் அமைப்புகள் தங்களின் பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு நகரில் போதிய அரங்குகள் இல்லாத காரணத்தால், தனியாா் திருமண மண்டபங்களையும் விடுதிகளையும் அதிக வாடகை கொடுத்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதேசமயம், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா கலையரங்கம் முறையான பராமரிப்பின்றி நீண்ட காலமாகப் பூட்டி கிடக்கிறது. எனவே, அண்ணா கலையரங்கத்தை உடனடியாகப் புதுப்பித்து, குறைந்த வாடகையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். .

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராஜராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments