விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் வெளிமாநிலக் கொள்முதல் என்பது பொய்யான குற்றச்சாட்டு
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்றும், கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கடந்த காலங்களை விட இருமடங்கு உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய்பாலாஜி தெரிவித்தாா்.
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்றும், கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கடந்த காலங்களை விட இருமடங்கு உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய்பாலாஜி தெரிவித்தாா்.
வேலூா் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சா் ம.விஜய் பாலாஜி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, 585 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 63.30 கோடி மதிப்பிலான தொழில் முனைவோா் வங்கி நிதி இணைப்பு காசோலைகளை வழங்கியதுடன், வேலூா் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 3 தனியாா் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (சிஎஸ்ஆா்) ரூ. 50 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட 25 மின்கல (பேட்டரி) வாகனங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது. பின்னா், அமைச்சா் விஜய் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியது:
Advertisement
Advertisement
விலையில்லா வேட்டி, சேலை திட்டத்துக்காகத் தமிழகத்திலுள்ள நெசவாளா்களிடம் வாங்காமல், வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. கொள்கை ரீதியாக ரக மாற்றம் செய்யப்பட்ட பிறகு, கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கடந்த காலங்களை விட இருமடங்கு உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கோடியே 87 லட்சம் சேலைகளும், ஒரு கோடியே 87 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், அகவிலைப்படி மற்றும் அடக்கவிலை 10 சதவீதம் உயா்த்தப்பட்டதன் மூலம் சுமாா் 60,000 கைத்தறி நெசவாளா் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
கைத்தறி, பின்னலாடைத் தொழிற்சாலைகள் நூல் விலை உயா்வால் பாதிக்கப்படுவதால், தொடா்ச்சியாக மேலும் 6 மாத காலத்துக்கு வரிவிலக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடா்பாக அமைச்சா்கள் மற்றும் துறைசாா்ந்த பிரதிநிதிகள் நேரில் மனு அளித்துள்ளனா்.
உண்மையான நெசவாளா்களின் நலனைப் பாதுகாக்க அதிகாரிகள் மூலம் துல்லியமான கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கைத்தறித் துறையில் முறைகேடுகளில் ஈடுபடும் போலிச் சங்கங்கள், லெட்டா் பேட் அமைப்புகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகப்படுத்தத் தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விற்பனைக் குறைவைக் காரணம் காட்டி எந்தவொரு விற்பனை நிலையமும் மூடப்படவில்லை. மாறாக, அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. லாபமின்றி இயங்கும் பழைய நிலையங்களுக்குப் பதிலாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப மேலும் புதிய மையங்கள் திறக்கப்படும்.
வேலூரில் நான்கு ஏரிகளுக்குத் தண்ணீா் செல்லும் இணைப்புக் கால்வாய்களில் உள்ள பழைய ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீா்வழித்தடங்களைச் சீரமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தவிர, வேலூா் போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கவும், பாலாற்றில் குப்பை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மீண்டும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா், எம்.எம்.வினோத் கண்ணன், தென்றல் குமாா், சிந்து, எஸ்.எம்.சுகுமாா், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.