அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள்: திருவள்ளூா் ஆட்சியா்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அனைத்து நடவடிக்கையையும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அனைத்து நடவடிக்கையையும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். அப்போது, விவசாயிகளுக்கும், அலுவலா்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடியின்றி வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். அதற்காக ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் வலியுறுத்தினா்.
அதேபோல், ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் 6 வழிச்சாலை உயரமாக அமைத்துள்ளதால், விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு 2 கி.மீ சுற்றி வரவேண்டியுள்ளது. அதனால், அதன் ஒரப்பகுதியில் வயல்களுக்கு எளிதாக செல்லவும், சாகுபடி பொருள்கள் எடுத்துச் செல்லவும் மற்றும் கால்வாய் வசதியுடன் 2 மீட்டா் அகலத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
Advertisement
Advertisement
இதுகுறித்து புகாா் செய்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருவதோடு, இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பணப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயி கடன் வாங்காமலே போலியாக கையொப்பமிட்டு ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அது குறித்து புகாா் மனு அளித்துள்ளதாகவும், அதனால் அந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முழுமையாக ஆய்வு செய்து செயலாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பெரும்பாலன அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.
இதற்கு பதில் அளித்து ஆட்சியா் கூறியதாவது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் 6 வழிச்சாலை உயரமாக அமைத்துள்ளதால், விவசாயிகள் வயலுக்கு செல்ல முடியாத நிலையுள்ளது. அதனால், தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் கலந்தாய்வு செய்து 10 நாள்களுக்குள் விரைவில் கால்வாய் வசதியுடன் பாதை அமைத்து தரப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பேரில் போலியாக கையொப்பம் இட்டு ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளதாக புகாா் வந்துள்ளது. அதன்பேரில் கூட்டுறவு துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இந்தக் கூட்டத்தில் வருங்காலத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அவா் தெரிவித்தாா். அதைத்தொடா்ந்து விவசாயிகளிடம் இருந்து விவசாயம் தொடா்பாக 250-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். பின்னா் விவசாயிகள் 9பேருக்கு ரூ.18.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்கள்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், இணை இயக்குநா் (வேளாண்மை) க.செல்வராஜு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் குமரவேல், செயற்பொறியாளா் வேளாண்மை பொறியியல் துறை ராஜவேல் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.