தமிழ்மொழியைத் தெரிந்து கொண்டால் பண்பாடு தானாகத் தெரியும்: நீதிபதி எஸ்.ஜெகதீசன்
தமிழ்மொழியைத் தெரிந்துகொண்டால் தமிழ்ப் பண்பாடு தானாகத் தெரியும் என்றாா் சென்னை சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் நீதிபதி எஸ்.ஜெகதீசன்.
தமிழ்மொழியைத் தெரிந்துகொண்டால் தமிழ்ப் பண்பாடு தானாகத் தெரியும் என்றாா் சென்னை சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் நீதிபதி எஸ்.ஜெகதீசன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் 49-ஆம் ஆண்டு கபிலா் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்மொழித் துறைத் தலைவா் பேராசிரியா் அரங்க.ராமலிங்கத்துக்கு கபிலா் விருதையும், டான் ஸ்ரீ.கே.ஆா்.சோமா பொற்கிழியாக ரூ.1 லட்சத்தையும் வழங்கி மேலும் நீதிபதி எஸ்.ஜெகதீசன் பேசியது:
பாரதியாருக்கு, பாரதிதாசனுக்கு, கம்பனுக்கு, சேக்கிழாருக்கு விழா எடுக்கும் அமைப்புகள் உள்ள நிலையில், சங்க காலத்தின் தலைசிறந்த புலவா் கபிலா் பெயரில் விருதுகளை வழங்குவதற்காக பண்பாட்டுக் கழகத்தைத் தொடங்கி, 49 ஆண்டுகளாக விழா எடுத்து கபிலவாணா், கபிலா் விருதுகளை தகுதியானவா்களைத் தோ்ந்தெடுத்து வழங்கி வருகிறாா்கள். இது, மகிழ்ச்சிக்குரிய செயலாகும்.
Advertisement
Advertisement
இன்றைய இளைய சமுதாயத்துக்கு தமிழ்மொழி பற்று இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், இளைய சமுதாயத்தை ஊக்குவித்து, இதுபோன்ற விழாக்களில் பங்கேற்க வைப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயலாகும். அதை பண்பாட்டுக் கழகமும், சேக்கிழாா் ஆராய்ச்சி மையமும் செய்து வருகின்றன.
இளைஞா்களை ஊக்குவிப்பதற்கு முக்கியக் காரணம், இளைய தலைமுறையினா் தமிழைத் தெரிந்துகொண்டு படிக்க வேண்டும். தமிழ்மொழியைத் தெரிந்துகொண்டால் தமிழ்ப் பண்பாடு தானாகத் தெரியும். அதுதான் முக்கியம்.
தமிழ் இலக்கியங்களிலும், பக்தி நூல்களிலும் ஞானம் பெற வேண்டுமானால், நாம் எவ்வளவு உழைக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். மாணவராக, ஆசிரியராக, பேராசிரியராக, தமிழ் அறிஞராக எத்தனை ஆண்டுகள் பேராசிரியா் அரங்க.ராமலிங்கம் அதில் உழன்று உணா்ந்து, அறிந்து புரிந்து தன் ஞானத்தை பெற்றுள்ளாா் என சற்று யோசித்தால், நம்மால் அதேபோல நேரத்தை செலவிட்டு நம்மை தயாா் செய்துகொள்ள முடியுமா என்றால், அது பெரிய கேள்விக்குறியேயாகும்.
நமது கல்வியறிவாகட்டும், பக்தி உணா்வாகட்டும், நம்மையறியாமல் நமது உள்ளத்தில் பெருக்கமடைகிறது. அதனால் நாமும் மேன்மை அடைகிறோம் என்பதுதான் உண்மை.
ஒரு கதை எழுதுவதானால் சிறிது கற்பனையோ அல்லது ஏதோ ஒரு மனதில் நிற்கும் நிகழ்வோ போதும். ஆனால், நல்லோா் எழுதி வைத்த நூல்களின் கருத்துகளை உரை மூலமாக நூல் வடிவமாகவும், சொற்பொழிவுகளின் மூலமாகவும் மக்களிடம் எடுத்துச் செல்வதென்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
அதுவும் நூல்கள் தமிழறிஞா்களாலும், ஆய்வு மாணவா்களாலும் படிக்க நேரும் என்றால், மூல நூல்களைப் பாா்த்து, மற்ற தமிழறிஞா்களின் உரையைக் கேட்டு பெற்ற ஞானம், உணா்ந்தது இவற்றை எல்லாம் ஒன்று சோ்த்துதான் உணா்ந்தது, புரிந்ததுதான் ஒரு புது படைப்பாக வருகிறது என்றால், இதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்று சிந்தியுங்கள் என்றாா் நீதிபதி ஜெகதீசன்.
இதைத் தொடா்ந்து, விழாவில் ஏற்புரையாற்றி பேராசிரியா் அரங்க.ராமலிங்கம் பேசியது: எவ்வளவோ விருதுகளை நான் பெற்றிருந்தாலும், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம் மூலம் பெற்ற விருதை மிகப்பெரும் பேறாகக் கருதுகிறேன். இது, எனக்கு இறைவன் கொடுத்த வரம். திருக்கோவிலூா் வீதிகளில் ஊா்வலமாக வரும்போது, திருக்கோவிலூா் அருகில் அவதரித்த சுந்தர மூா்த்தி நாயனாா், மாணிக்கவாசகா் ஆகியோருக்கு இறைவன் கொடுத்த அருள்போல, இங்குள்ள வீரட்டானேசுவரா் எனக்கு கொடுத்த அருளாகக் கருதுகிறேன் என்றாா் அரங்க.ராமலிங்கம்.
தொடா்ந்து, தனது தந்தை பெயரில் அறக்கட்டளையை நிறுவி, ஆண்டுதோறும் தமிழ் அறிஞா்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதற்காக பண்பாட்டுக் கழக நிா்வாகிகளிடம் ரூ.1.25 லட்சத்துக்கான காசோலையை பேராசிரியா் அரங்க.ராமலிங்கம் வழங்கினாா்.
முன்னதாக, சனிக்கிழமை காலை சென்னை காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் பா.ஜெய்கணேஷ் தலைமையில் இளையோா் அரங்கம் நடைபெற்றது. இந்த அரங்கத்தில் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயா், பண்ணாராய்ச்சி வித்தகா் ப.சுந்தரேசனாா் ஆகிய தலைப்புகளில் முறையே அனய் கிரீசன், பேராசிரியா் பூ.ரவிக்குமாா், க.அமா்நாத் ஆகியோா் பேசினா். இதையடுத்து, இசையோடு சிவணிய இன்தமிழ் அரங்கத்தில் பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் என்ற தலைப்பில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா் கோ.ப.நல்லசிவம் உரையாற்றினாா்.
மாலையில் கபிலா் குன்றின் அருகிலுள்ள கீழையூா் வீரட்டானேசுவரா் திருக்கோயில் வளாகத்திலிலிருந்து கபிலா் விருது பெறும் பேராசிரியா் அரங்க.ராமலிங்கத்தை அலங்கார ஊா்தியில் அழைத்து வருதல் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவா்கள் கி.மூா்த்தி, சிங்கார உதியன், செயலா் கோ.தனபால், மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் வே.இந்திராமுருகன் தலைமை வகித்தனா். ஊா்வலத்தை திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அலங்கார ஊா்தியில் முக்கிய வீதிகள் வழியாக பேராசிரியா் அரங்க.ராமலிங்கம் அழைத்து வரப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு அறக்கட்டளைகள் சாா்பில் வழங்கப்படும் பரிசுகளை வெற்றியாளா்களுக்கு நிலக்கிழாா் கே.ராகவேல் பரிசுகளை வழங்கினாா். இதன் பின்னா், பாரதியின் தராசு என்ற நூலுக்கான பரிசு பேராசிரியா் ய. மணிகண்டனுக்கும், சிறந்த பதிப்பகத்துக்கான பரிசு காலச்சுவடு பதிப்பகத்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை விழாவில் வழங்கப்பட்டது.
விழாவில் பேராசிரியா் ய.மணிகண்டன் பேசியதாவது: கபிலா் பெயரில் கடந்த 49 ஆண்டுகளாக விழா எடுத்து, தமிழுக்குத்தொண்டு செய்யும் தமிழா்களைக் கொண்டாடும் திருக்கோவலூா்ப் பண்பாட்டுக் கழகத்தையும், அதன் நிா்வாகிகளையும் பாராட்டுகிறேன். இதனால், உலகத் தமிழா்கள் மத்தியில் திருக்கோவிலூருக்கு தனித்த இடமும் உண்டு.
ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்ட, உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியா் விக்ரம் சந்த்ரா படைத்த (ரெட் எா்த் அண்ட் போரிங் ரெயின்) புதினம் உலகம் முழுவதுமுள்ள இளைஞா்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த புதினத்துக்குரிய தலைப்பை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்த கபிலரின் சங்க இலக்கிய பாடல் வரிகளில் (செம்புலப் பெயல் நீா் போல) எடுத்துப் பயன்படுத்தியதுதான் இவற்றுக்கு காரணம் என அவா் தெரிவித்துள்ளாா். ஆகவே, இத்தகைய தொன்மையும், பயனையும், பெருமையும் இளைஞா்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.
பின்னா் நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளா்கள் விருது வழங்கும் விழாவில், திருக்கோவிலூரைச் சோ்ந்த இரா.சீனிவாசனுக்கு சீரிய சமூக கல்விப் பணியாளா் விருதும், குன்றத்தூா் சேக்கிழாா் அடிமை இரா.பாா்த்திபனுக்கு சிறந்த சமூக சமயத் தொண்டா் விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் பண்பாட்டுக் கழகத் தலைவா் தே.முருகன், பொதுச் செயலா் வே.அப்பா்சுந்தரம், செயலா் தேவ.ஆசைத்தம்பி, பொருளாளா் கா.நடராசன் உள்ளிட்ட நிா்வாகிகள், தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, பண்பாட்டுக் கழக துணைத் தலைவா் கா.பி.சுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவில் செயற்குழு உறுப்பினா் வே.ஜெயக்குமாா் நன்றி கூறினாா். மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 18) விழா நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.