FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலில் வீணாகக் கலக்கும் 2 லட்சம் கனஅடி தண்ணீர்: காய்ந்து கிடக்கும் பாசன வாய்க்கால்கள்!

கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக 2 லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் சென்று வீணாகக் கலக்கும் நிலையில்

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:00 am IST
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக 2 லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் சென்று வீணாகக் கலக்கும் நிலையில், பாசன வாய்க்கால்கள், குளங்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தாததே இதற்குக் காரணம் என விவசாயிகள்  வேதனையுடன் கூறுகின்றனர். 
காவிரி டெல்டாவின் கடை மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களை உள்ளடக்கியது கடலூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் வறட்சி, வெள்ளம், புயல் பாதிப்பு என இயற்கைச் சீற்றங்கள் மாறி, மாறி ஏற்படுவதால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. மாவட்டத்தில் 2004, 2007, 2012, 2013  ஆகிய ஆண்டுகளில் மழை அளவு குறைந்து வறட்சி ஏற்பட்டது. 2016-ஆம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. இந்த ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் மழையளவு 81% குறைவாக பெய்து, தமிழகத்திலேயே வறட்சியில் முதலிடம் பெற்றது. 2017-ஆம் ஆண்டு மாத வாரியான சராசரி மழையை விட  இயல்பான மழையளவு குறைவாக இருந்தது.
2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் - 44.40 மி.மீ, பிப்ரவரி மாதம் 0.53 மி.மீ, மார்ச் மாதம் - 8.59 மி.மீ, ஏப்ரல் மாதம் - 1.83 மி.மீ, மே மாதம் - 4.49 மி.மீ, ஜூன் மாதம் - 28.96 மி.மீ. என்ற அளவில் மழைப் பொழிவு இருந்தது. இருப்பினும், கடுமையான வறட்சியின் காரணமாக நீர் ஆதாரங்களில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் வீராணம் ஏரி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களும் வறண்டு கிடந்தன. 
தற்போது கர்நாடகத்தில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் வழியாக கீழணைக்கு தண்ணீர் வந்தடைந்தது. 
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்ட நிலையில் ஏரியின் நீர்மட்டம் 45.85 அடியாக உள்ளது. இந்த நிலையில், கீழணையில் இருந்து உபரி நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களும், குளங்களும் வறண்டு கிடக்கின்றன. 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டியிருந்தால், கடலுக்கு  செல்லும் நீரை தேக்கி வைத்திருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யாததால் கடலுக்கு தண்ணீர் வீணாகச் செல்கிறது. தற்போது பாசன வாய்க்கால்களில் தண்ணீரை திறந்துவிட்டால், கால்நடைகளுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படும். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments