மாவட்டத்தில் நீட் தேர்ச்சி விகிதம் என்ன? தகவலளிக்கத் தயங்கும் கல்வித் துறை
கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் குறித்த தகவலை அளிக்க மாவட்ட கல்வித் துறை தயங்கி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் குறித்த தகவலை அளிக்க மாவட்ட கல்வித் துறை தயங்கி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் 14 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, அதற்காக ஒவ்வொரு பயிற்சி மையத்துக்கும் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மொத்தம் 396 மாணவ, மாணவிகளுக்கு 2017 டிசம்பர் மாதம் முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, பொதுத் தேர்வு முடிவுக்குப் பின்னர் நாள்தோறும் பயிற்சியளிக்கப்பட்டது.
மேலும், பயிற்சி பெற்று வந்தவர்களில் சிறப்பானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 108 பேர் தமிழ் மொழி வழியிலான பயிற்சிக்குத் திருச்சிக்கும், 26 பேர் ஆங்கில மொழி வழியிலான பயிற்சிக்கு சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு சிறப்புக் கவனம் செலுத்தி அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக சென்னை கல்வித் துறை தகவல் வெளியிட்டது.
இதுகுறித்து, கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்திலிருந்து 396 பேர் தேர்வு எழுதியதாகவும், அவர்களில் 65 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை கல்வித் துறை அளித்த தகவல் குறித்து கேட்க முயன்ற போது, முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) முனுசாமி, அவரது நேர்முக உதவியாளர் முருகன் ஆகியோரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.